குகை வாசலை நெருங்கி வவ்வால்களைப் பார்த்ததுமே ஒருவன் 'நா வீட்டுக்கு போறேன், எங்கம்மா தேடுவாங்க' என்று கழன்று கொண்டான். அவனைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி எங்கள் யார் வீடுகளிலும் போய் சொல்லக் கூடாது என்று முக்கா முக்கா மூணுவாட்டி 'சத்தியம்' வாங்கிய பின்னரே அவன் போக அனுமதித்தோம்.
கம்பு ஒன்றில் பழைய துணியைச் சுற்றி, நெருப்பு மூட்டி தீப்பந்தம் தயாரானவுடன் 'ஒண்ணுக்கு போயிட்டு வந்துர்றேன்' என்று போன ஒருவனை ஆளையே காணோம். மூன்றாமவனும் குகையின் அமைப்பைப் பார்த்து அரண்டு போயிருந்தான். என்னையும் போக வேண்டாம், வீட்டுக்கு போய் விடலாம் என்று வற்புறுத்திய அவன் எனது பிடிவாதம் கண்டு 'நா வரலே, ஆனா வெளியே நிக்கேன்' என்று பெரிய மனது பண்ணி ஆறுதல் அளித்தான்.
குகை வாயில் தான் அவ்வளவு (சுமார் ஐம்பது, அறுபதடி உயரம்) பெரியதே தவிர குகை என்பது ஒரு பெரிய பொந்து அவ்வளவுதான். ஆனால் நீளம் அதிகம் என்று நினைக்கிறேன்.
கையில் தீப்பந்தத்துடனும், மனதில் திகிலுடனும் உள்ளே நுழைந்தேன். வெகு குறுகலான குகை அது. கொஞ்சம் பெரிய உடலுடன் எவரும் தவழ்ந்து கூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு அது. நான் ஏற்கனவே நோஞ்சானாக இருந்தது வசதியாகவே இருந்தது. ஒரு ஏழெட்டு அல்லது பத்து அடி உள்ளே சென்றிருப்பேன், ஒண்ணுக்கு போனவன் வந்துவிட்டான். வெளியில் இருந்த மூன்றாமவனுடன் சேர்ந்து அவன் கத்த ஆரம்பித்து விட்டான். 'லேய் வந்துருலே, வேணாம்லே....' என்று ஆரம்பித்து ஒண்ணுக்கு போனவன் அழவே ஆரம்பித்து விட்டான். நான் திரும்ப சத்தமே கொடுக்கவில்லை.
குகையினுள் அதிகப்படியான ஈரப்பதம், நீர் அங்கங்கே சொட்டியது. குகையின் பாறைச்சுவர்களில் காக்கைப் பொன் துகள்கள் மினுக்கின. உள்ளே நுழைந்த அடுத்த நொடியே வியர்த்து ஊற்றி விட்டது. குகை மிகக் குறுகலானதால், முன்னே நீட்டியிருந்த தீப்பந்த வெம்மை வேறு தகித்தது.
மூச்சு முட்டியது. குகைக்குள் இருந்து புலி ஒன்று எதிரில் உறுமியபடி வருவது போலவும் அதன் பின்னால் முனிவர் ஒருவரும் காட்டுமிராண்டி ஒருவனும் வருவது போலெல்லாம் தோன்றியது.
மேலும் பத்தடி கூட தவழ்ந்திருக்க மாட்டேன், தீப்பந்தம் அணைந்து விட்டது. இருட்டென்றால் இருட்டு அப்படி ஒரு இருட்டு. வெளியிலிருப்பவன் அழும் சத்தம் தீனமாகக் கேட்டது. திரும்பக் கூட இயலாத ஒரு இடுகலில் இருந்தேன். எப்படியோ இடித்து கை, கால் முட்டியை எல்லாம் சிராய்த்துக் கொண்டு ஒரு வழியாக வெளியே வந்தேன். அவ்வளவுதான்.
வெளியில் இருந்த இருவரும் என்னை கடவுளாகவே பார்த்தனர். ஆனால் பொறாமையால் என்னைப் பாராட்டாமல், 'இதெல்லாம் உங்கம்மாவுக்கு தெரிஞ்சா அம்புட்டுதாம்லே' என்று வயிற்றில் புளியைக் கரைத்தனர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை.
கொஞ்ச நாள் எனது வீர சாகசம் பற்றி அரசல் புரசலாக தற்பெருமை அடித்துக் கொண்டேன். இதற்கு பின்னர் 'ஒல்லிப்பாச்சான்' என்று என்னை ஏளனம் செய்த பெரிய பையன்கள் கூட என்னிடம் வம்பு செய்யவில்லை. கோடை விடுமுறை கழித்து பள்ளிக்கு போய் சக மாணவர்களிடம் நான் புலிக்குகைக்கு 'உள்ளே' போய் வந்ததை விலாவாரியாக (ஏகப்பட்ட ரீலுடன்) சொன்னபோது யாருமே நம்பவில்லை. தெருப்பையன்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு தெரிந்த பின்னர் தான் நம்பினர்.
(சில ஆண்டுகள் முன்பு புலிக்குகை பக்கத்தில் அகழ்வாய்வில் பழங்கால கட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தித்தாளில் பார்த்தேன்.)
அசை தொடரும்.
நாங்கள் கூட ஒருமுறை கொடைக்கானல் குணா cave பின் பக்கம் உள்ள ஒரு குகைக்குள் சென்றோம் ,இப்போது செல்ல முடியாது. வேலி போட்டு விட்டார்கள்.
ஒரே சேறும் சகதியுமாய் இருந்தது .ஆனால் மிக பெரிய அளவிலான குகை
Comment by babu — செப்டம்பர் 26, 2008 @ 2:06 பிற்பகல் |