ஒவ்வொருத்தர் குறிப்பிட்ட சில விஷயங்களில் கஞ்சர்களாக இருப்பதைப் பார்க்கலாம். புத்தகம் வாங்குவதில் கஞ்சத்தனம், துணிமணி வாங்குவதில் கஞ்சத்தனம் என்று பல கஞ்சத்தனங்கள் உண்டு. தனக்கென எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வதும், கூட வருபவர்களுக்கு சேர்த்து செலவு செய்ய யோசிப்பதும் நம்மவர்களில் பெரும்பாலானோர்க்கு பழக்கம்.
இதில் ரொம்ப சுவாரசியமானது சாப்பாட்டு நேரக் கஞ்சத்தனம் தான்.
நண்பனொருவனிடம் இது பற்றி விவாதித்த போது என்னென்ன கஞ்ச தந்திரங்கள் கையாளப்படுகின்றன என்று தெரிந்து, ஆச்சரியமாகி விட்டது. இது குறித்து என் நண்பன் ஒருவன் புலம்பிய புலம்பல்கள்……..
நண்பர்களையோ, உறவினர்களையோ எங்காவது சந்தித்து, சேர்ந்து சாப்பிடப் போகும் போதுதான் இந்த கஞ்சத்தனம் தெரியும் என்கிறான் நண்பன்.
உணவு விடுதிக்கு சாப்பிடக் கூப்பிட்டால் போதும், இவர்களின் மனப்போர் ஆரம்பமாகிவிடும். அழைப்பைத் தவிர்க்க முடியாது சில சமயம், சாப்பிடப் போகவும் ஆசை அல்லது பசி, ஆனால், பைசா நாம் கொடுக்க நேரிடுமோ என்ற பயம்.
விடுதிக்கு போகும்போதே சிந்தனை படரும். 'போய் ஒரு காப்பி மட்டும் குடிச்சிடலாம், அவன் மட்டும் சாப்டுட்டு காசைக் கொடுத்துத் தொலையட்டும்' என்று மனதில் எண்ணம் ஓடும். எதிராளி நன்றாக வயிறு முட்ட சாப்பிடுவதை வேறு வழியின்றி பார்த்துக்கொண்டே, அரை சிரட்டை காப்பியை அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை ஊதி ஊதி உறிஞ்சுவார்கள். இல்லாவிட்டால், அடிக்கடி எச்சில் ஊறி விழுங்க வேண்டியிருக்குமே. கொஞ்சம் விவரமானவர்கள், போனதும் காப்பி சொல்ல மாட்டார்களாம், எதிராளி சாப்பிட்டு முடிப்பதற்கு சற்று முன்தான் காப்பி சொல்லுவார்களாம். முதலிலேயே காப்பி குடித்து முடித்து விட்டால், சும்மா அமர்ந்திருக்கும் இவரிடம் பில் நீட்டப்பட்டு விடும் என்ற பயமாம்.
பேருந்திலோ புகை வண்டியிலோ வரும்போது சாப்பாட்டுக்கு காசு யார் கொடுப்பது என்ற பயத்தில் அனைவரும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதெல்லாம் சகஜம் என்று பல்லைக் கடிக்கிறான் நண்பன்.
ஒரு சிலர் 'டிபன் சாப்பிடலாமா?' என்று கேட்கும் போதே, 'அடடே நான் பர்ஸ் எடுத்துட்டு வரலேயே, கிரெடிட் கார்டு கூட அதிலேதான் இருக்கு' என்று அங்கேயே பில் பொறுப்பை நண்பன் தலையில் கட்டி விடுவார்களாம். 'இப்போதான் சாப்ட்டு வந்தேன்' என்று பொய் சொல்லிச் சமாளிப்பது சிலர் வழக்கம் போலிருக்கிறது. எதிரில் அமர்ந்து கொண்டு எதுவும் சாப்பிடாமலேயே பொழுதைப் போக்கி விடுவார்கள். என்ன செய்ய, காசை மிச்சப்படுத்த வேறு வழி?
பணத்தை வேறெங்காவது பத்திரப்படுத்தி விட்டு ஐம்பது ரூபாயை மட்டும் பர்ஸில் வைத்துக் கொள்வது ஒரு உத்தி. பணம் கொடுக்க பர்சைத்திறந்து விட்டு, 'ஓஹோ, காலைல பெட்ரோல் போட்டேன் இல்லே, அதான் அம்பது ரூபா மட்டும் இருக்கு' என்று தப்பித்துக் கொள்வது. பணத்தை பத்திரப்படுத்த மறந்திருந்தால், பாத்ரூம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அங்கு போய் ரகசியமாக காசை மாற்றி வைத்துக் கொண்டு வருபவர்களும் உண்டாம். இப்படி காசை மாற்றப் போய் ஒருவன் கக்கூசிலேயே ஒரு மாத சம்பளத்தை பர்ஸோடு போட்டு விட்டு அவதிப்பட்ட கதையெல்லாம் உண்டாம்.
சந்திக்க வரும்போதே, தொலைபேசியில் 'மாப்ளே அங்கதான் வர்றேன், பீர் வாங்கி வச்சிடு, சாப்பாடும் சிகரெட்டும் நா வாங்கிட்டு வந்துடறேன்' என்று இடக்கு பண்ணுவது ஒருத்தன் வழக்கமாம். எங்காவது காக்காய் பிரியாணிக் கடையில் பத்து அல்லது பதினைந்து ரூபாய்க்கு ஒரு குஸ்கா பொட்டலம், அதுதான் 'சாப்பாடு', கூட இரண்டு சிகரெட். 'லெக் பீஸ் இல்ல மாப்ள, அதான் குஸ்கா மட்டும் வாங்கிட்டு வந்தேன்' என்று சமாளிப்பானாம். ஆனால், திரும்பப் போகும்போது தனியாக தலப்பாகட்டில் முழுக்கட்டாக பிரியாணி சாப்பிட்டு விட்டுப் போகும் எமகாதகன் இவன் என்கிறான் என் நண்பன்.
இன்னும் ஒரு சிலர் கிட்டத்தட்ட பிச்சை எடுப்பது போன்றே, 'ஒன்னையப் பாக்கத்தான் வர்றேன், இன்னிக்கு வெஜ்ஜா நான் வெஜ்ஜா, என்ன வாங்கித் தர்றே?' என்று செல்பேசியிலேயே காசுக்கு களங்கமில்லை என்று உறுதி செய்து கொண்டு அப்புறம்தான் வருவார்களாம்.
இன்னொருத்தன், சாப்பிடும்போது வேண்டுமென்றே மிக மெதுவாகச் சாப்பிடுவானாம். பில் வரும்போது ஒரு கை சாப்பாட்டில் இருக்கும், மறு கையில் தண்ணீர் டம்ளர் இருக்கும். இவன் கையில் பில் கொடுக்க முடியாது, தட்டில் பில் வைத்தாலும் யாராவது பில்லை எடுத்து பொறுப்பேற்கும் வரை தண்ணீர் குடிப்பது, திரும்ப ஜக்கில் இருந்து தண்ணீர் ஊற்றித் திரும்பக் குடிப்பது இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பானாம்.
பில் வருவதற்கு ஓரிரு நிமிடம் முன்னால் செல்பேசியை எடுத்து யாருக்காவது பேச ஆரம்பிப்பது சர்வ சாதாரணமாக கையாளப்படும் யுக்தி. தொலைக்காட்சி இருந்தால் அதை ஆர்வமாகப் பார்ப்பது போல நடிப்பது ஒரு தந்திரம். கேர்ஃப்ரீ விளம்பரமாக இருந்தாலுமே 'இந்த விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று சிலாகிப்பார்கள் என்று கடுப்பாகிறான் என் நண்பன்.
சுவரோரமாக எதிரெதிரே இரண்டிரண்டு பேராக உட்காரும் நாற்காலி அமைப்பில், முதலில் போய் சுவரோரம் உள்ள நாற்காலியில் அமர்ந்து விடுவது ஒரு சிலரின் குயுக்தி. பில் கொடுக்கப்படும் போது இந்தப்பக்கம், அதாவது நடைப்பக்கம் உள்ளவரிடமே பில் தரப்படும்.
சிலருக்கோ, கல்லாவில் காசு கொடுக்கும் சமயத்தில்தான் இரண்டு கால்சராய் பாக்கெட்கள், பின் பாக்கெட், மேல் பாக்கெட், உள்பாக்கெட் என்று சகல இடங்களிலும் (பர்ஸைத் தேடுவாராம்) கை மேயும் போல். பணத்தை எடுக்க கொஞ்சம் தாமதித்தால் அடுத்தவன் கொடுத்து விடுவான் என்ற ஒரு நப்பாசையாம்.
சரியாக பில் வரும் நேரத்தில் கைகழுவப் போவது, மேசைக்கு கீழே கைக்குட்டையைப் போட்டு விட்டு எடுப்பது போன்றவை எல்லாம் பழைய ஆனால் என்றும் கைவிடப்படாத தந்திரங்கள் என்று தெரிகிறதாம்.
எதற்கும் உதவாத கிரெடிட் கார்டு ஒன்றை வைத்திருப்பது சிலர் பழக்கமாம். தேய்க்கப்பட்டால், கண்டிப்பாக செல்லாது, டிக்ளைன் ஆகும். வேறெவன் தலையிலோ பில் விழும். 'பேங்குக்கு நாக்கப் பிடுங்கற மாதிரி மெயில் அனுப்பணும், நாளைக்கு ஞாபகப்படுத்து' என்று பில்லுக்கு பணம் கொடுத்தவனிடமே சைட் ரீல் ஓட்டுவார்களாம்.
பர்ஸில், ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு வருவது ஒரு உபாயம். பெரும்பாலும் 'சில்லறை இல்லை' என்ற பதில் இவர்களின் வயிற்றில் பால் வார்த்து விடுமாம்.
பணம் செலவழிக்காமல் நழுவியவர்கள் கல்லாவில் சில்லறைக்காசு தேவைப்பட்டால் மின்னல் வேகத்தில் சில்லறையை அள்ளிக் கொடுப்பது, பார்க்கிங் ஊழியருக்கு டிப்ஸ் தருவது போன்ற அல்ப வித்தைகள் எல்லாம் காட்டுவார்களாம்.
இது மாதிரியானவர்கள், வெளியில் வந்ததும், 'சிகரெட் வாங்கறேன் / கூல் டிரிங்க்ஸ் குடிக்கலாம்' என்று தங்கள் கஞ்சத்தனத்தையோ / தவறையோ / குற்ற உணர்ச்சியையோ மறைக்க எத்தனிக்கும் போது 'எனக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டும் ஒரு லைட்டரும் வாங்கிடு, அப்டியே ஒரு லிட்டர் கூல்டிரிங் ஒரு வாட்டர் பாட்டில்' என்று அடுக்கி இது மாதிரி ஆட்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது என் நண்பனின் பழக்கம்.
பொதுவாகவே “Dutch treat” தான் தொல்லை இல்லாதது.
Comment by ஜுர்கேன் க்ருகேர் — செப்டம்பர் 24, 2008 @ 11:02 மு.பகல் |
ungal ideakku nandri
Comment by Loose paiyan — செப்டம்பர் 24, 2008 @ 11:22 மு.பகல் |
படிக்க தமாஷா இருந்தாலும், ரொம்ப ப்ராக்டிக்கலா இருக்கு. :)
Comment by buginsoup — செப்டம்பர் 24, 2008 @ 4:09 பிற்பகல் |
ரொம்பவும் அனுபவப்பட்டிருப்பீங்க போல!;) அருமையான ஆராய்ச்சியாக இருக்கிறது கடுகு!
Comment by veyilaan — செப்டம்பர் 24, 2008 @ 4:39 பிற்பகல் |
\\பொதுவாகவே “Dutch treat” தான் தொல்லை இல்லாதது.//
நன்றி. ரொம்ப சரிதான், ஆனாலும் நம்ம மக்கள் அடுத்தவன் தலையில மொளகா அரைக்கறதுலெயே குறியா இருக்காங்க, அவங்ககிட்டே இதெல்லாம் பலிக்குமா என்ன?
அப்டியே ஒங்க பேருக்கும் பொருள் சொல்லிருங்க, யோசிச்சி மண்டை காயுது.
Loose paiyan, Buginsoup, Veyilaan ஆகியோருக்கு நன்றி.
Comment by கடுகு — செப்டம்பர் 24, 2008 @ 5:20 பிற்பகல் |
கலக்கிட்டிங்க! இந்த மாதிரி கேசு நானும் நிறைய பார்த்திருக்கேன்.
பி ஹெச் டி பண்ற அளவுக்கு யோசிச்சிருக்கீங்க
Comment by கடைசிபக்கம் — செப்டம்பர் 24, 2008 @ 9:50 பிற்பகல் |
ரூம் போட்டு யோசிக்கிறீங்கப்பூ……….. இப்பிடி எல்லாத்தையும் சொல்லிட்டீங்கன்னா, என்னய மாதிரி ஆளுங்க்க பாடு தின்டாட்டம் ஆகிடுமே,.
Comment by ramanathan — செப்டம்பர் 24, 2008 @ 10:46 பிற்பகல் |
\\பி ஹெச் டி பண்ற அளவுக்கு யோசிச்சிருக்கீங்க// கடைசிபக்கம்
\\ரூம் போட்டு யோசிக்கிறீங்கப்பூ// Ramanathan
நன்றி
Comment by கடுகு — செப்டம்பர் 25, 2008 @ 7:37 பிற்பகல் |