கடுகு

செப்டம்பர் 18, 2008

உங்களுக்கும் மரணம் வரும்………..

நம்பவே முடியவில்லை, இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் மேலிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த எனது நெருங்கிய நண்பர் முதல் மாரடைப்பிலேயே காலமாகி விட்டார். மரணம் சற்று சர்ச்சைக்குரியதாகி விடவே போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னரே உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரது அடுக்கக வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் கார் பார்க்கிங்கில் பார்வைக்காக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பழகுவதற்கு மிக இனிமையானவர், நாணயமானவர், கெளரவமானவர், காவல் அதிகாரி போன்ற கம்பீரத் தோற்றமுடையவர், விதிகளை மீறாதவர் எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் அவர். நேற்று வரை அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எத்தனை, சுற்றி வந்த நண்பர்கள் எத்தனை பேர், அட்டவணை போட்டு சுற்றி வரும்படியான நண்பர்கள். இன்று அவருக்காக அழுது கொண்டிருப்ப‌வர் அவரது மனைவி மட்டுமே. அவர் அழுவது கண்டு கண்கலங்கி சிலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர், அவ்வளவுதான். ஆம்புலன்சுக்கு அருகில் போக மனமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை, சொல்லி வைத்தது போல் எல்லோரும் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தனர். அவரது பத்து வயது மகன் திகிலடித்துப் போய் அங்குமிங்கும் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்தான். அவனை அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் எத்தனிக்கவில்லை.

பாவம், அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடக் கூட ஆளில்லை. அந்த அளவு அலட்சியம். இறந்தவருக்கு என்ன வாங்கிப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற பகுத்தறிவுத்தனமாகக் கூட இருக்கலாம். மாலை கூட இல்லாததைக் கண்டு வெறுத்துப் போய் நண்பருடன் பைக்கில் சென்று மாலை வாங்கி வந்தேன். பைக்கில் என் பின்னால் அமர்ந்து மாலையைச் சுமந்து வந்த நண்பருக்கு மாலை சாத்த உடன் வர தயக்கம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது வரவில்லை என்று நூறடி தள்ளியே நின்று விட்டார். மாலையை ஆம்புலன்சில் படியேறிப் போட எனக்கு உதவி செய்ய எவருமில்லை. நான் திணறுவது கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரைமனதுடன் பீடியை வீசிவிட்டு வந்து உதவினார்.

அலுவலக நண்பர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் வந்த‌ உடன் பைல் செய்ய வேண்டும் போன்ற அலுவலக ரீதியான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன‌. மலர் வளையம் வைத்த பின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பயப் பார்வை, அத்துடன் கழன்று கொண்டனர். வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி, வந்தாக வேண்டுமே என்று வந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

கடைந்தெடுத்த அயோக்கியன் இறந்தால் கூட சொல்லப்படுகிற “பாவம் நல்ல மனுஷன் போயிட்டாரு” போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளைக் கூட அங்கே கேட்க முடியவில்லை. “இம்பெர்சனல் அஃபிஷியல் ஒர்க்” மாதிரி ஒரு வேலைக்கு வந்தது போன்ற இறுக்கமான எந்திர முகபாவனைகள், அவற்றில் மெய்யான‌ வருத்தம் புலப்பட‌வில்லை.

தேவையற்ற ஒரு இறுக்கம், அது துக்கத்தின் பொருட்டு விளைந்ததல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. தவறிக்கூட சிரித்து விடக்கூடாது, அதிரப் பேசக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த முகங்களில் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட கவலை தொக்கி நிற்கிறது. சில அக்கம்பக்கவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் பரிதாபப் பார்வைகள் மட்டுமே சொல்லத்தக்கவை.

போஸ்ட் மார்ட்டம் செய்ததால் வீட்டுக்குள் கொண்டு செல்லாமல் உடனடியாக‌ பக்கத்திலிருக்கும் மயானத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று முதலில் உறவினர் ஒருவர் தெரிவித்தார். பின்னர், ஊருக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி வந்த‌தும் கூட்டம் கலைய ஆரம்பிக்கின்ற‌து.

“அதான் ஊருக்கு கொண்டு போறாங்களாமில்லே, நாம இருந்து என்ன பண்ண” என்ற முணு முணுப்புகள் கேட்கின்றன‌. இறந்தவருக்கு மாலை கூட இடாதவர்கள், கடைசி வரை இருந்து என்ன செய்ய‌ முடியும் என்று தெரியவில்லை.

“நல்ல வேளையா ஊருக்கு கொண்டு போறாங்க, இல்லேன்னா மயானம் வரைக்கும் கூடப் போயாகணும்” என்ற நிம்மதி பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிற‌து.

“பரவாயில்லை, மயானம் வரை போற சிரமம் மிச்சம், அதனால ஆம்புலன்ஸ் கிளம்பற வரை இருக்கலாம்” என்று சிலர் பெரியமனதுடன் முடிவு செய்துவிட்டிருந்தனர்.

“அடேங்கப்பா ஊரு வரைக்கும் போயிட்டு வரணுமா?” என்று கறுப்பு கால்சராயில் துக்கம் அனுஷ்டிக்கும் சில நாகரீக கனவான்களின் முகங்கள் கறுக்கின்றன……..

நகரத்தனத்தின் சுழலில் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நோய் தொற்றிக் கொள்ளுமா? மறைந்தவர் பாய்ந்து வரப்போகிறாரா, பேய் பிசாசு பயமா? என்ன பயம் உங்களுக்கு?

நீங்கள் மேதாவிகளாகவும், பணம் படைத்தவர்களாகவும், நகரவாசிகளாகவும்,இருக்கலாம். மனிதர்களாக இருக்கிறீர்களா? சக மனிதனது மரணத்திற்குக் கூட மரியாதை செலுத்தாத, இரங்காத நீங்கள் பண்பாடற்ற காட்டுவாசிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்கு கஷ்டம் வந்த போது உதவியவர், அறிவுறுத்தியவர், நேற்று வரை கூடிக் குலவியவருக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? ஒருவருடன் மணிக்கணக்கில் அரட்டையில் நேரத்தைக் கழித்த நீங்கள் அவரது இறுதிச் சடங்குக்கு மயானம் வரை செல்ல நேரக்கணக்கும் சிரமமும் பார்க்கிறீர்களே, நாளை உங்களுக்கும் மரணம் வரும், நினைவில் கொள்ளுங்கள்.

12 மறுமொழிகள் »

  1. :( (..கனத்துப் போகிறது மனம்…

    Comment by sandanamullai — செப்டம்பர் 18, 2008 @ 2:15 பிற்பகல் | பதில்

  2. என்ன சொல்வதென்றே தெரியவில்லை,எனக்கு இது போன்ற அனுபவங்கள் உண்டு.என்னுடைய வீட்டின் கீழே குடியிருந்த ஒரு பாட்டி இறந்தபோது அவர் மகனின் நண்பர்கள் ஒரு நாலு பேர் மற்றும் நான் ஆகியோர் தான் இருந்தோம் .இத்தனைக்கும் மயானத்திற்கும் வீட்டிற்க்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான்.ஆனால் அவருடன் தினமும் தண்ணி அடிப்பவர்கள் அதைவிட அதிகம்

    Comment by babu — செப்டம்பர் 18, 2008 @ 3:03 பிற்பகல் | பதில்

  3. நமக்கும் ஒரு நாள் மரணம் உண்டு இன்று அவர் இருந்த அந்த ஆம்புலன்ஸில் நாளை இருப்பது நாமாக கூட இருக்கலாம் எங்கே போனது மனித நேயம்? மனம் கணக்கிறது

    Comment by masdooka — செப்டம்பர் 18, 2008 @ 9:47 பிற்பகல் | பதில்

  4. இந்த மற்றம் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்குள் தான்……..ஏன்?

    Comment by Sarathy — செப்டம்பர் 19, 2008 @ 4:54 மு.பகல் | பதில்

  5. நன்றி Sandanamullai, Babu, Masdooka, Sarathy.

    \\இந்த மற்றம் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்குள் தான்……..ஏன்?//

    கல்வி முதல் கடவுள் வரை அனைத்தும் வியாபாரமாகி விட்டன. எதிலும் வணிக நோக்கமும் சுய நலமுமே கோலோச்சுகின்றன. கூட்டுக்குடும்ப முறை கிட்டத்தட்ட முற்றிலும் சிதைந்து விட்டது. பணமே பிரதானம். மனித நேயம், நட்பு, உறவுகள், பாசம் ஆகியவை பெயரளவில் மட்டும் உள்ளன, சமயம் வரும்போதே சுயரூபம் தெரிகிறது. இந்த சீர்கேட்டுக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அதிகம்.

    கிராமங்களில் நிலைமை ஓரளவு தேவலை என்று நினைக்கிறேன்.

    Comment by கடுகு — செப்டம்பர் 19, 2008 @ 10:19 மு.பகல் | பதில்

  6. VERY WORST HUMEN.

    Comment by sathya — செப்டம்பர் 19, 2008 @ 12:19 பிற்பகல் | பதில்

  7. ஒரு காக்கா செத்துபோனா மத்த காக்கைகளும் அதை சுத்தி சுத்தி வரும்.
    காக்கைகளிடம் இருக்கிற அந்த உணர்வுகள் கூட சில மனிதர்களிடம் இருப்பதில்லை. உங்க கட்டுரை ரொம்ப “disturb” பண்ணிடுச்சி சார்.

    Comment by ஜூர்கேன் க்ருகேர் — செப்டம்பர் 19, 2008 @ 12:37 பிற்பகல் | பதில்

  8. பயமாக உள்ளது.. நாளை நான் இறந்த பின் இப்படித்தானோ???
    நீங்கள் குறிப்பிட்டதுபோல், இவ்வளவு நற்குணங்கள் கொண்டவருக்கே இந்த நிலையென்றால்..

    சிந்திக்கவேண்டிய ஒரு கருத்தை தந்துள்ளீர்..

    Comment by Senthil — செப்டம்பர் 19, 2008 @ 1:03 பிற்பகல் | பதில்

  9. நல்லவங்கக‌ளுக்கு இதுதான் நிலையோ?

    Comment by Narendran — செப்டம்பர் 19, 2008 @ 1:46 பிற்பகல் | பதில்

  10. touch in my heart , More valuable article.

    Comment by Nagamani — நவம்பர் 24, 2008 @ 7:42 பிற்பகல் | பதில்

  11. நன்றி : ஜூர்கென், சத்யா, செந்தில், நரேந்திரன், நாகமணி.

    Comment by கடுகு — நவம்பர் 24, 2008 @ 8:38 பிற்பகல் | பதில்

  12. realy it is toch my heart

    Comment by subra — மார்ச் 27, 2009 @ 8:33 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.