உடலுடைய ஆன்மாவுக்கு குணங்களுக்கேற்ப நம்பிக்கையும் மூவகைப்படுகிறது. அதுபற்றிக் கேட்பாயாக.
மனநிலைக்கேற்ப நம்பிக்கையும், அதன் விருத்தியும் அமைகின்றது. நம்பிக்கையே அவன்.
சத்வ குணத்தவர் தேவர்களையும், ரஜோ குணத்தவர் அசுரரையும், தமோ குணத்தவர் பேய்களையும், இறந்தவர்களையும் வணங்குகின்றனர்.
சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்படாத கடுந்தவங்களையும், விரதங்களையும், தற்பெருமையாலும், கர்வத்தாலும், காமத்துடன், பற்றுடன் செய்பவர்கள் ரஜோ குணத்தவராவர். அவர்கள் தமது உடலையும், உடலுள் வாழும் பரமான்வையும் துன்புறுத்துவதால் அசுரர் என்றறிவாயாக.
உணவும் குணங்களுக்கேற்ப மூவகைப்படும். யாகம், தவம், தானம் கூட அப்படியே. இவ்வேற்றுமைகளைக் கேள்.
சத்வ ஆகாரம் வாழ்நாளை நீட்டிக்கும். தூய்மை, பலம், சுகம், சுகாதாரம் மற்றும் திருப்தி தரும். மேலும் அவை இனிமையாகவும், ரஸமுள்ளதாகவும், சுவையுடையவாகவும் உள்ளன.
மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பான, காரமான, உலர்ந்த, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சேர்ந்தவை. இவை வலி, மனத்துன்பம் மற்றும் வியாதியைத் தரும்.
காலம் கடந்த, சுவையற்ற, பழைய வாசனையுள்ள, எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாலானது.
சாஸ்திர நெறிகளுக்கு ஏற்ப எப்பலனையும் பாராது செய்யப்படும் யாகம் சத்வ குணத்தாலானது.
மேல்கிரகம் செல்வதற்காகவும், இகவுலக லாபம் கருதியும் செய்யப்படும் யாக மதச்சடங்குகள் ரஜோ குணத்தாலானவை.
சாஸ்திர நெறிகளை ஏற்காது, பிரசாத வினியோகமின்றி, வேத மந்திர உச்சாடனமின்றி, புரோகித தட்சணை தரப்படாது, நம்பிக்கையின்றி செய்யப்படும் யாகம் தமோ குணத்தாலானது.
இறைவன், அந்தணர், குரு, தாய்தந்தை போன்ற பெரியோரை வணங்குதல், தூய்மை, எளிமை, பிரம்மச்சர்யம் ஆகியவை தேக தவம் ஆகும்.
உண்மையை நன்மை தரும்படியும், மனம் நோகாதபடியும் பேசுவது, வேதம் ஓதுதல் இவை வாக்குத்தவம் ஆகும்.
சாந்தம் எளிமை, கம்பீரம், சுய கட்டுப்பாடு, எண்ணத்தூய்மை இவை மனத்தின் தவமாகும்.
சுயநோக்கமின்றி, பரமபுருஷரின் திருப்திக்காகச் செய்யப்படும் இத்தவங்கள் சத்வ குணத்தாலானவை.
மதிப்பு, மரியாதை, வணக்கம் பெறுவதற்காக ஆடம்பரமாகச் செய்யப்படும் தவங்களும், விரதங்களும் ரஜோ குணத்தாலானவை. நிலையற்றவை.
மூடத்தனமாகத் தன்னைத் துன்புறுத்தியோ, பிறரைத் துன்புறுத்தவோ செய்யும் தவ விரதங்கள் தமோ குணத்தாலானவை.
தக்கநேரத்தில், தக்க இடத்தில், தக்க நபருக்கு எப்பலனும் பாராது, கடமை போல் செய்யப்படும் தானம் சத்வ குணத்தாலானது.
ஏதேனும் பலன் பார்த்தோ, பலனிச்சையுடனோ, விருப்பமின்றியோ கொடுக்கப்படும் தானம் ரஜோ குணத்தாலானது.
தகுதியற்ற இடத்தில், தகுதியற்ற நேரத்தில் தகுதியற்றவருக்கு மரியாதையின்றி, கவனமின்றி தரப்படும் தானம் தமோ குணத்திலானது.
ஓம், தத், ஸத் எனும் மூன்று எழுத்து அமைப்புக்களும் படைப்பு முதற்கொண்டு இறைவனைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேத உச்சாடனத்தின் போதும், யக்ஞத்தின் போதும் பரம புருஷரின் திருப்திக்காக ஆன்மீகவாதிகளால் இவை உச்சரிக்கப்பட்டன.
ஓம் எனும் சப்தத்துடன், ஆன்மீகிகள் இறைவனை அடைவதற்காக யாக, தான, தவங்களை ஆரம்பிக்கின்றனர்.
தத் எனும் சப்தத்துடன், உலகச் செயல்களிலிருந்து விடுபடும் எண்ணத்துடன் யாக, தான, தவங்களைப் புரிய வேண்டும்.
ஸத் என்பது பக்தி யோகத்தின் இலக்கான பூரண உண்மையான இறைவனைக் குறிப்பதாகும். உண்மையில் யாகம், தானம், தவம் போன்ற செயல்கள் அனைத்தும் இறைவனைத் திருப்திப்படுத்த மட்டுமே செய்யப்படுகின்றன.
ப்ருதாவின் மைந்தா, இறைவன் மீது நம்பிக்கையின்றி செய்யப்படும் யாக, தான, தவச் செயல்கள் எவையும் நிரந்தரமானவையல்ல. அவை ‘அஸத்’ எனப்படும். மரணத்திற்குப் பின்னும் கூட அச்செயல்கள் உதவாது.