கடுகு

மே 16, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 16 - தெய்வ அசூர சம்பத் யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
Tags: ,
பகவான் : பரதனின் மைந்தனே, அஞ்சாமை, தன் இருப்பில் தூய்மையாய் இருத்தல், இணக்கம், ஈகை, தன்னடக்கம், ஞானவிருத்தி, யாகம், வேதம் படித்தல், தபஸ், எளிமை, அகிம்சை, வாய்மை, சினமின்மை, துறவு, அமைதி, புறங்கூறாமை, இரக்கம், பேராசையின்மை, இனிமை, நிதானம், சலிப்புறாமை, தைரியம், பொறை, வலிமை, தூய்மை, சூதின்மை, செருக்கின்மை இவைகள் தெய்வீகக் குணங்களாகும்.

பகட்டு, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அஞ்ஞானம் முதலானவை அசுரக் குணங்களாகும்.

தெய்வீகக் குணங்கள் ஒருவனை விடுபடுத்துகின்றன. அசுரக்குணங்கள் சிறைப்படுத்துகின்றன. பாண்டுபுத்திரா, வருந்தாதே. நீ தெய்வீகக் குணங்களுடன் பிறந்துள்ளாய்.
மனிதர்களிலும் தெய்வீகம், அசுரத்தனம் என இருவிதம் உண்டு. அசுரத்தன்மையை விளக்குகிறேன்.

அசுரர்கள் நன்மை, தீமைகளை அறியார். தூய்மை, வாய்மை, ஒழுக்கம் அவர்களிடத்தில் காணப்படாது.

இவ்வுலகம் பொய் என்றும், ஆதாரமற்றது என்றும், உலகை இயக்கும் கடவுளை இல்லை என்றும், காமத்தால் உலகு படைக்கப்பட்டது, அதைத்தவிர வேறேதும் இல்லை என்றும் அசுரர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் அறிவிழந்தவர்களாய் தன்னையும் கொன்று, உலகையும் அழிப்பதற்கான லாபமற்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் நிறைவேறாத காமம், ஆடம்பரம், பெருமை, பொய்க்கவுரவ‌ம் இவற்றால் மயங்கி, நிரந்தரமற்றவைகளில் மனம் மயங்கி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சாகும் வரை இவர்கள் காமத்தாலும், கவலையாலும், கோபத்தாலும் புலனுகர்வுக்காக தவறான முறையில் செல்வத்தைச் சேர்க்கின்றனர். அறியாமையால் “இது என்னால் அடையப்பட்டது. திட்டமிட்டபடி மேலும் செல்வம் சேர்ப்பேன், இது என்னுடையது, எதிர்காலத்தில் இது இன்னும் பெருகும், அவன் எனக்கு எதிரி, அதனால் கொன்று விடுவேன், நானே தலைவன், நானே சுகம் காண்பவன், பலசாலி, பக்குவமானவன், செல்வாக்குடையவன், தான யாகம் செய்வேன், இவ்வாறு இன்பமாயிருப்பேன்” இவை போன்றவை அசுரர்களின் எண்ணங்கள் ஆகும்.

எண்ணக் குழப்பங்களாலும், மோகத்தாலும் காம போகத்தில் பற்றுள்ள இவர்கள் நரகில் வீழ்கின்றனர்.

திமிராலும், வளத்தாலும், பொய் கவுரவத்தாலும் மயங்கிக் கிடக்கும் இந்த அசுரத் தன்மையினர், நெறிமுறை இன்றி யாகமுஞ் செய்வர். பொய்யான தன்னுணர்வு, பலம், பெருமை, காமம், கோபம் இவற்றில் மயங்கிப் போன இவ்வசுரர்கள் தமக்குள்ளும் பிற உயிர்களுக்குள்ளும் வாழும் பரமாத்மாவின் மீது பொறாமையுற்று உண்மைக்கு எதிரான நிந்தனைகள் புரிகின்றனர்.

மிகவும் தரந்தாழ்ந்த, பொறாமை, குறும்புகள் நிறைந்த இவர்கள் கடல் போன்ற ஜட இருப்பின் பலவிதமான அசுர யோனிகளுள் என்னால் தள்ளப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, என்னை அடையமுடியாத கீழ் நிலையை அடைகின்றனர்.

ஆன்மாவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் மூன்று நரக வாசல்கள் காமம், கோபம், லோபம் ஆகியவை. அறிவாளிகள் இவற்றைத் துறக்க வேண்டும். இதிலிருந்து தப்பிய ஒருவன், தன்னை அறிவதற்கு சாதகமான செயல்களைச் செய்து, படிப்படியாக உயர்ந்து பரம இலக்கை அடைகிறான்.

காமத்தால் சாஸ்திர நெறிகளைப் பொருட்படுத்தாது, மனம் போனபடி வாழ்பவன் ஆன்ம பக்குவத்தையோ, சுகத்தையோ, பரம இலக்கையோ அடைவதில்லை. ஆகையால் நல்வினை, தீவினைகளை அறிய சாஸ்திர விதிமுறைகளைக் கடைப்பிடித்து உயர முயல வேண்டும்.

கடுகு.காம்…….. www.kadugu.com

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.