இம்மரத்தின் உண்மைத்தோற்றம் இங்கில்லை. இதன் துவக்கமோ முடிவோ, அஸ்திவாரமோ யாராலும் புரிய முடியாதது. எனினும் பற்றின்மை எனும் கோடாரியால் இதனை வீழ்த்த வேண்டும். இதனால் எங்கு சென்றால் மீண்டும் திரும்புவதில்லையோ அங்கு, யாரிடமிருந்து அனைத்தும் துவங்குகின்றதோ, சிந்தனைக்கு எட்டாக் காலம் தொட்டு எல்லாம் தங்கியிருக்கிறதோ, அந்த முழு முதற்கடவுளைச் சரணடைய வேண்டும்.
மயக்கம், பொய், அகங்காரம், பொய் உறவுகள், காமம், இருமைகள் இவற்றிலிருந்து விடுபட்டவனே நித்யத்தை அறிந்தவன். இறைவனைச் சரணடைவதைப் புரிந்தவன் அவனே, அவனே அவரது தேசத்தை அடைகிறான்.
அத்தேசமானது, சூர்ய சந்திரராலும், பிற ஒளியாலும் ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு சென்றவன் மீண்டும் இங்கு திரும்புவதில்லை.
ஜடவுலகில் வாழும் உயிரினங்கள் அனைவரும் எனது நித்தியமான பின்னப்பகுதிகளாவர். கட்டுண்ட காரணத்தால் மனம் முதலான ஆறு புலன்களால் கஷ்டப்படுகின்றனர்.
காற்றானது வாசனையைச் சுமந்து செல்வது போல், ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு உணர்வுகளை உயிர்வாழி சுமந்து செல்கிறான். இங்கனம் சென்றதும் அவனது மனதுக்குப் பொருத்தமான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றைத் தனதாக்கியபடி உரிமையுடன் விஷயங்களை அனுபவிக்கிறான்.
உயிர்வாழி எங்கனம் உடலை விட்டுப் போகிறான் என்பதையும், குண மயக்கத்தால் எத்தகைய சரீரத்தை அடுத்துப் பெறுவான் என்பதையும் மூடர்களால் அறிய இயலாது. அறிவைப் பயின்றவர்களே இதனை அறிய முடியும். ஆன்ம உணர்வில் நிலைத்திருப்பவன் இதனைத் தெளிவாகக் காணலாம். அவ்வுணர்வு இல்லாதவன் முயன்றாலும் நடப்பதைக் காண இயலாது.
ஜடவுலக இருளை நீக்கும் கதிரவனின் ஒளி என்னிடமிருந்தே தோன்றுகிறது. சந்திரன், நெருப்பு ஆகியவற்றின் ஒளியும் என்னிடமிருந்தே வருகிறது.
நான் ஒவ்வொரு கிரகத்தினுள் நுழைவதாலும், எனது சக்தியாலும் கிரகங்கள் தமது சுழற்பாதையில் செல்கின்றன. நானே சந்திரனாகி தாவரங்களுக்கு வாழ்வு ரசத்தை வழங்குகிறேன். (தாவரங்களிலிருந்து நாம் பெறும் சுவையான பொருட்களின் சுவைக்குக் காரணமாக வாழ்வு ரசம் உள்ளது). உயிர்களின் உடலில் உதரக்கனலாய் இருந்து உள், வெளி மூச்சுக் காற்றால் நான்கு விதமான உணவுகளை நானே செரிக்கச் செய்கிறேன். (நான்குவித உணவுகள் – பக்ஷயம் மெல்லுதல், போக்யம் விழுங்குதல், லேஹ்யம் நக்குதல், சோஷ்யம் உறிஞ்சுதல்)
ஒவ்வொருவரின் இதயத்திலும் நான் உள்ளேன். என்னிடமிருந்தே நினைவும், ஞானமும், மறதியும் உண்டாகின்றன. வேதங்களால் நானே அறியப்பட வேண்டியவன். வேதாந்தத்தை இயற்றியவனும், அறிபவனும் கூட நானே.
இழிபவர், இழியாதவர் என இருவகை மனிதர்கள் உள்ளனர். ஜடவுலகில் அனைவருக்கும் இழியும் வாய்ப்பு உண்டு. ஆன்மீக உலகில் இழியும் வாய்ப்பில்லை.
இவ்விருவருக்கும் அப்பாற்பட்டு உலகிற்குள் புகுந்து அவற்றைக் காப்பவரான ஈஸ்வரன் இருக்கிறார். இழிபவர், இழியாதவர் இவ்விருவருக்கும் அப்பாற்பட்டு சிறந்தவனாக நான் விளங்குவதால் உலகாலும், வேதங்களாலும் நான் அந்த ஈஸ்வரனாக, புருஷோத்தமனாக கொண்டாடப்படுகிறேன்.
சந்தேகமின்றி புருஷோத்தமனாக என்னை ஏற்பவன் எல்லாமறிந்தவன். அவன் முழு பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.
குற்றமற்றவனே, வேதங்களின் மிகவும் ரகசியமான பகுதி இதுவே. உனக்கு இப்போது அது வெளிப்படுத்தப்பட்டது. இதை அறிபவனே அறிஞன். அவன் தன் முயற்சிகளில் பக்குவம் பெற்றவன்.