கடுகு

மே 14, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 14 - குண‌த்ர‌ய‌ விபாக யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
Tags: ,
ஸ்ரீ பகவான் : அர்ஜூனா மீண்டும் ஞானங்களில் உயர்ந்ததைக் கூறுகிறேன். இதையறிந்த முனிவர்கள் உயர்ந்த பக்குவத்தைப் பெற்றுள்ளனர். இஞ்ஞானத்தைப் பெறும் ஒருவன் எனது இயற்கையைப் போல் தெய்வீக இயற்கையை அடையலாம். அவன் படைப்பின்போது வருவதுமில்லை, அழிவின்போது அழிவதுமில்லை.

பரத மைந்தா, மஹத்தத்துவம் எனும் மொத்த ஜட இருப்பே பிறப்பின் மூலம். அனைத்தும் அதிலிருந்தே தோன்றின.

எல்லா உயிரினங்களும் பிறப்பால் சாத்தியமாக்கப்படுகின்றன. அவற்றுக்கு விதையளிக்கும் தந்தையாக நான் இருக்கிறேன்.

ஜட இயற்கை என்பது சத்வ, ரஜோ, தமோ குணங்களால் ஆனது. இக் குணங்களே இயற்கைக்குள் புகுந்துள்ள அழிவில்லாத தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.

பாபமற்றவனே, குணங்களில் சத்வம் தூயது. பாப விளைவுகளிலிருந்து அதுவே விடுவிக்கிறது. இக்குணத்தினால் தான் ஞான விருத்தி கிடைக்கிறது. எனினும் இக்குணம் ஒருவனை இன்ப நினைவுகளுக்கு அடிமையாக்குகிறது.

ரஜோ குணம் அடங்காத ஆசையினாலும் விருப்பத்தாலும் நிரம்பியது. இது ஒருவனை பலன் நோக்கும் செயல்களுக்கு அடிமையாக்குகிறது.

தமோ குணம் உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாவதுடன், பித்தம், சோம்பல், உறக்கம் போன்றவற்றுக்கு அடிமை ஆக்குகிறது.

சத்வ குணம் இன்பத்திற்கும், ரஜோ குணம் செயலின் பலனுக்கும், தமோ குணம் பித்த நிலைக்கும் ஒருவனை அடிமையாக்குகின்றன.

பரத மைந்தா, சத்வ குணம் சில சமயங்களில் ரஜோ குணத்தைத் தோற்கடிக்கின்றது. வேறு சில சமயங்களில் தமோ குணம், ரஜோ குணத்தைத் தோற்கடிக்கிறது. குணங்களுக்குள் உயர் நிலைக்கான போட்டி இருந்து கொண்டே இருக்கிறது.

உடலின் ஒன்பது கதவுகளும் ஞானத்தால் பிரகாசப்பட்டு இருக்கையில் சத்வ குணத்தின் தோற்றமானது உணரப்பட முடியும்.

ரஜோகுணம் ஓங்கும் போது பெரும் பற்று, அடங்காத ஆசை, ஏக்கம், கடின உழைப்பு இவைகள் உள்ளன.

தமோகுணம் மேலோங்கும் போது பித்தம், மயக்கம், சோம்பல், இருள் ஆகியவை உண்டாகும்.

சத்வ குணத்திலிருக்கையில் உடலை விடுபவன் புனிதமான மேல் கிரஹங்களை அடைகிறான். ரஜோ குணத்திலிருக்கையில் இறப்பவன் பலனோக்கு செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களிடையே (பூவுலகில்) பிறவி எடுக்கிறான். தமோ குணத்தில் இருக்கையில் இறப்பவனோ மிருக இனத்தில் பிறவியெடுக்கிறான்.

சத்வ குண செயல்கள் ஒருவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ரஜோ குண செயல்கள் துக்கம் தருகின்றன. தமோ குண செயல்கள் அறிவிலித்தனமாக அமைகின்றன.

சத்வ குணத்தில் ஞானம் விருத்தி, ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம், தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன.

சாத்வீகி படிப்படியாக மேல்கிரஹத்திற்குச் செல்கிறான். ரஜோ குணத்தவன் பூவுலகில் மீண்டும் பிறக்கிறான். தமோ குணத்தவன் கீழ் கிரஹங்களுக்கு இழிகிறான்.

குணங்களுக்கு அப்பாற்பட்டு செயல்கள் எதுவுமில்லை. ஆனால் பரம புருஷர் குணங்களுக்கு அப்பாற்பட்டவர். இதை நீ அறியும்போது எனது ஆன்மீக இயல்பினை அடைவாய். (குணங்களில் மேம்படுவாய்).

குணத்தால் உடலைப் பெற்றாலும், குணங்களிலிருந்து உயர்வு பெறுவானாகில் ஒருவன் ஜடத்துயரங்களிலிருந்து விடுபட்டு, இவ்வாழ்விலேயே அமிர்தத்தைச் சுவைக்கலாம்.

அர்ஜூனன் : இறைவா, அங்கனம் குணத்தில் உயர்ந்தவனின் அறிகுறிகள் எவை? அவந்து நடத்தை எவ்வாறிருக்கும்? அவன் எவ்வாறு உயர்கிறான்.

ஸ்ரீ பகவான் : முக்குணங்களின் வெளிப்பாடுகளான பிரகாசம், பற்று, மயக்கம் இவைகள் தோன்றும்போது அவற்றை அடைய ஏங்காதவனும், குணங்களின் ஜட‌ விளைவுகளுக்கு அப்பாற்பட்டு அலட்சியமாய் இருப்பவனும், உறுதியானவனும், குணங்களே செயல்படுகின்றன என அறிபவனும், இன்பதுன்பங்களையும், புகழ்ச்சி, இகழ்ச்சிகளையும் சமமாகப் பாவிப்பவனும், மான அவமானத்தில் மாறுபடாதவனும், மண், கல், பொன் இவற்றை சம நோக்கில் காண்பவனும், நண்பனையும் எதிரியையும் ஒரே பாங்கில் நடத்துபவனும், பலன் தரும் செயல்களைத் துறந்தவனும் ஆன மனிதன் குணங்களில் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

எந்த நிலையிலும் பிறழாது எனக்காக முழு பக்தித் தொண்டாற்றுபவன், முக்குணங்களைக் கடந்து பிரம்ம நிலையை எய்துகிறான்.

கடுகு.காம்…….. www.kadugu.com

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.