பகவான்: குந்தி மைந்தா, இவ்வுடலே க்ஷேத்ரம். இதை அறிபவன் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். உடல், அதன் உரிமையாளர் இதனைப் புரிந்து கொள்வதே ஞானம். இதுவே என் அபிப்பிராயம்.
(உடலே க்ஷேத்ரம். அதனுள் உடலை அறியும் உரிமையாளனும் (ஜீவன்), உரிமையாளனை அறியும் எல்லாமறிந்த பரமான்மாவும் வாழ்கின்றனர். இதில் ஜீவன், பரம புருஷ பகவானின் சக்தி அல்லது பகவானின் ஆன்மீக சரீரத்தின் அங்கத் துணுக்காவான். பரமான்மாவோ, பகவானின் பிரதிநிதி அல்லது அவரது சுயவிரிவு ஆவார்.
இனி க்ஷேத்ரம், அதன் மாற்றங்கள் – க்ஷேத்ரஞன், அவனது தன்மைகள் பற்றி சுருக்கமாக கூறுகிறேன். இவை முனிவர்களால் ஆய்ந்து சொல்லப்பட்டவை.
ஐந்து பூதங்கள், அகங்காரம், அறிவு, குணங்களின் தோன்றா நிலை, பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் விஷயங்கள் மற்றும் விருப்பு, வெறுப்பு, இன்பதுன்பம், உடலமைப்பு, உணர்வு, திட நம்பிக்கை இவைகளே க்ஷேத்ரமும், அதன் தோற்றமும் ஆகும்.
அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மீக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் – இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.
எதையறிவதால் நித்திய அமுதத்தை சுவைப்பாயோ, அறிய வேண்டிய அதனைக் கூறுகிறேன். துவக்கமற்றது அது. எனக்கு கீழ்ப்பட்டது. பிரம்மம் அல்லது ஆன்மா எனப்படுவது; ஜடவுலகின் காரண விளைவுகளுக்கு அப்பாற்பட்டது.
(மூன்று விதமான பிரம்ம ஞானங்கள் – செயற்களமான இயற்கையும் பிரம்மமே. இட இயற்கையை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஜீவான்மாவும் பிரம்மமே. இவையிரண்டின் உண்மை ஆளுனராக உள்ள பரமான்மாவும் பிரம்மமே.
மேலும் எல்லா இடங்களிலும் கரங்கள், கால்கள், முகங்கள், கண்கள் இவற்றுடன் பரமான்மா இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார். அவரே புலன்களின் மூலமாயிருந்தாலும் புலன்களற்று இருக்கிறார். அனைவரையும் காப்பவராயினும் பற்றற்றவர். குணங்களுக்கு இறைவனாய் இருந்தும் குணங்களற்றவர். அசையும், அசையா அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளார். தூரத்திலும் இருக்கிறார், அருகிலும் இருக்கிறார், எனினும், ஜடப் புலன்களால் அவரைக் காணவோ, அறியவோ இயலாது.
அவர் ஜீவர்களில் பிரிந்திருப்பதாய் தோன்றினாலும், பிரிவற்றவர். உயிரினங்க்களைப் பாதுகாவலனாயும், அழிப்பவராயும், அபிவிருத்தி செய்பவராயும், பிரகாசங்களுக்கு மூலமாயும் இருக்கிறார். இருளுக்கு அப்பாற்பட்டவராயினும், தோன்றாதவராய் இருக்கிறார். ஞானம், ஞானத்தின் லட்சியமான அவர், அனைவரின் இதயத்திலும் இருக்கிறார்.
இவ்வாறாக க்ஷேத்ரம், அதை அறிபவன், ஞானம் அனைத்தும் சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. என் பக்தர்கள் மட்டுமே இவைகளைத் தெளிவாய் அறிந்து, எனது இயற்கையை அடைய இயலும்.
இந்த ஜட இயற்கையும், உயிரினங்களும் துவக்கமற்றவை. ஆனால் அவை இரண்டின் மாற்றங்களும் (ஆரம்பம், வளர்ச்சி, தேய்வு, முடிவு), குணங்களும் – ஜட இயற்கையிலிருந்தே உண்டாகின்றன, ஆன்மாவிற்கு சம்பந்தமில்லை.
செயல்கள், விளைவுகளுக்கு காரணம் ஜட இயற்கையாகும். ஆனால் இன்பதுன்பங்களுக்கு காரணம் உயிரினங்கள் மட்டுமே. அவன் இயற்கையின் தொடர்பால் முக்குணங்களின்படி பல சரீரங்களில் வாழ்ந்து, நன்மை தீமைகளைத் துய்க்கிறான்.
இருப்பினும் இவ்வுடலில் உன்னதமான ஓர் அனுபவிப்பாளர் இருக்கிறார். அவரே பரம புருஷர், உரிமையாளர், அனுமதிப்பவர், மேற்பார்வையிடுபவர், பரமான்மா ஆவார்.
இயற்கை, உயிர்வாழி – இரண்டுக்கும் இடையேயான இயற்கைக் குணங்களின் விளைவுகள் இவை தொடர்பான உண்மைகளைப் புரிந்து கொள்பவன் நிச்சயமாக விடுதலை பெறுகிறான். எந்த நிலையிலும் அவன் மீண்டும் பிறப்பதில்லை.
தியானத்தால் சிலரும், ஞான விருத்தியால் சிலரும், பலனோக்காத செயல்பாட்டினால் சிலரும் பரமாத்வாவை உணர்கின்றனர்.
ஆன்மீக அனுபவங்கள் இல்லாவிடிலும், பிறரிடம் கேட்டறிந்து இறைவனை வழிபடுகின்றனர். அவர்கள் கேட்பதற்கான ஆவலால் மாத்திரம் பிறப்பு, இறப்பெனும் சுழலில் சிக்காது உயர்கின்றனர்.
பாரதர்களின் தலைவா, சராசரங்களில் நீ காண்பவை எல்லாம் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இரண்டின் கலவையே.
எல்லா உயிர்களிலும் ஜீவான்மாவைத் தொடர்பவராக பரமான்மாவைக் காண்பவனும், அவர்கள் அழிவற்றவர்கள் என்பதை அறிந்து கொள்பவனுமே உண்மையில் காண்பவனாவான். அவன் மனத்தால் தன்னை தரமிழக்கச் செய்து கொள்வதில்லை, தெய்வீக இலக்கை அடைகிறான்.
செயல்களுக்கெல்லாம் காரணம் ஜட இயற்கையால் ஆன உடலே, ஆன்மா அல்ல என அறிபவன் உண்மையைக் கண்டவனாகிறான்.
பரமாத்வாவிற்கு சொந்தமில்லாத, ஜடத்தோற்ற வேறுபாடுகளைக் காணும் நிலையைக் கடந்து விடும்போது ஒருவன் பிரம்ம நிலையை அடைகிறான். உயிரினங்கள் பரந்து இருப்பதையும் காண்கிறான்.
அர்ஜூனா, நித்தியமான, தெய்வீகமான, குணங்களுக்கு அப்பாற்பட்டதான ஆன்மா, ஜடத்தொடர்பால் உடல் பெற்றாலும் அது எதையும் செய்வதோ, சிக்குவதோ இல்லை.
எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் தனது நுட்பமான இயற்கையால் களங்கமற்று இருப்பது போல, பிரம்ம உணர்வில் திளைக்கும் ஆன்மாவும் ஜட தேகத்தால் களங்கமடைவதில்லை.
பரத மைந்தா, கதிரவன் அகிலமெல்லாம் பிரகாசிப்பது போல், ஆன்மா உணர்வால் உடலெங்கும் பிரகாசிக்கிறது.
உடலுக்கும், அதன் உரிமையாளனுக்கும் இடையேயான இந்த வேறுபாட்டினை அறிந்து கொண்டவனும், விடுபடும் முறையை அறிபவனுமான ஒருவன் பரம இலக்கை அடைகிறான்.