கடுகு

மே 12, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 12 - பக்தி யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?

பகவான்: எனது திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.

புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர். ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது.

பார்த்தனே, என்னில் மனதை வை. எப்போதும் என்னையே தியானித்து, என் தொண்டிலே ஈடுபட்டு, பிறழாது என்னிடம் பக்தி கொண்டு, செயல்களை எனக்காகத் துறந்து, என்னை வழிபடுவனை உடனடியாக சம்சாரக் கடலிலிருந்து காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

என்மீது மனதை நிறுத்தி உன் அறிவை எல்லாம் என்னில் ஈடுபடுத்து. இவ்வாறாக நீ என்னுடன் எப்போதும் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.

தனஞ்செயா, அவ்வாறு பிறழாது என்மீது உன் மனதை நிறுத்த முடியாவிடில், பக்தி நெறிகளைக் கைக்கொள். இவ்விதமாய் என்னை அடையும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்.

பக்தி நெறிகளையும் கடைப்பிடிக்க முடியாவிடில், எனக்காக மட்டும் செயல்பட முயற்சி செய், இதனால் நீ பக்குவமடையலாம்.

இதையும் நீ செய்ய முடியாவிடில், செயலின் விளைவுகளைத் துறக்க முயற்சி செய். இவ்விதம் ஆன்மாவில் நிலைபெறலாம்.

அதுவும் முடியாவிடில், அறிவை விருத்தி செய். ஆனால் அறிவைவிட தியானமும், தியானத்தை விட செயலின் பலனைத் துறத்தலும் சிறந்தன. இதனால் மன அமைதி பெறலாம்.

பொறாமையற்ற, எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனான, தன்னை உரிமையாளனாகக் கருதாதவனான, பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவனான, இன்ப துன்பங்களில் சமமானவனான, எனது தொண்டில் எப்போதும் திருப்தி கொண்டவனான, அறிவும், மனதும் என்னில் உடன்பாடு கொண்ட எனது பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

யாருக்காக உலகம் வருந்துவதில்லையோ, யார் உலகத்தால் வருந்துவதில்லையோ, பயம், இன்ப துன்பங்களில் தடுமாறாத அத்தகு மனிதன் எனக்கு மிகப் பிரியமானவன்.

எந்த விருப்புமில்லாத தூயவனும், திறமைசாலியும், கவலையற்றவனும், பலனுக்காக முயலாதவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாதவனும், கவலைப்படாதவனும், விரும்பாதவனும், சுப அசுப விஷயங்களைத் துறப்பவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

நண்பரிடத்தும், பகைவரிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், இன்ப துன்பங்கள், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி இவைகளில் நடு நிலையானவனும், களங்கங்களிலிருந்து விடுபட்டவனும், அமைதியானவனும், தங்கும் இடத்திற்காக கவலைப்படாதவனும், அறிவில் நிற்பவனுமான எனக்குத் தொண்டாற்றும் பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

அர்ஜூனா, பக்தித் தொண்டின் அழிவற்ற பாதையைப் பின்பற்றி பெரு நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்தி, என்னையே இறுதி இலக்காக ஏற்பவன் எனக்கு மிகமிகப் பிரியமானவன்.

கடுகு.காம்…….. www.kadugu.com

1 மறுமொழி »

  1. [...] பக்குவமானதாக நான் கருதுகிறேன்.-பகவத் கீதை – அத்தியாயம் 12 – பக்தி யோகம் தத்துவ மாவது அருவம் சராசரம்தத்துவ [...]

    வரு பிங்கு by உருவ வழிபாடு பகுத்தறிவில்லை எனும் பித்தலாட்டம் « இந்தியன் (Hindusthani) — டிசம்பர் 16, 2008 @ 10:47 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.