கடுகு

மே 11, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 11 - விஸ்வரூப தரிசன யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
அர்ஜூனன்: கமலக்கண்ணா, என்மீது தாங்கள் அனுக்கிரகித்து அன்புடன் இயம்பியவற்றால் எனது மயக்கம் தெளிந்தது. உம் மகிமைகளையும், உயிரினங்களின் ஜனன, மரண விவரங்களையும் அறிந்தேன். பரமேஸ்வரா, என்முன் உம்மை நான் உண்மையில் கண்டுகொண்டிருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் நீர் எவ்வாறு நிறைந்துள்ளீர் என்பதைக் காண ஆவலாய் உள்ளேன். என்னால் அதைக் காணமுடியும் என நீர் நினைத்தால், யோகேஸ்வரா, அன்புடன் அந்த அகில ரூபத்தைக் காட்டி அருள்வீராக.

பகவான்: அர்ஜூனா, எனது வைபவங்களை ஆயிரக்கணக்கான தெய்வீக உரு, வர்ணங்களுடன் காண்பாயாக. ஆதித்யர்கள், ருத்ரர்கள், தேவர்கள் அனைவரையும் பார். இதுவரை யாரும் காணாத வினோதங்களைப் பார். இந்த விஸ்வரூபத்தில் நீ, காண விரும்புவதையும், வருங்காலத்தில் காண விரும்புவதையும் காணலாம். எல்லாம் முழுமையாய் உள்ளன. ஆனால் உன் கண்களால் இதைக் காணமுடியாது என்பதால், உனக்கு தெய்வீகக் கண்களை அளிக்கிறேன்.

சஞ்சயன்: மன்னா, இங்ஙனம் கூறிய பகவான், அர்ஜூனனிடம் தமது விஸ்வரூபத்தைக் காட்டினார்.

அவ்வடிவில் அர்ஜூனன் எண்ணற்ற வினோதமான கண்களையும், வாய்களையும் கண்டான். இறைவன் தெய்வீக ஆடை, ஆபரணங்களுடன், மாலை மற்றும் வாசனைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பிரம்மாண்டமாக எங்கும் வியாபித்துக் காணப்பட்டார். பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் உதித்தால் ஒருவேளை அந்த விஸ்வரூப ஜோதிக்கு இணையாகலாம். ஆயிரக்கணக்கில் பிரிந்திருக்கும் அகில விஸ்தாரமெல்லாம் ஒரே இடத்தில் பார்த்தனால் பார்க்கப்பட்டது. மெய்சிலிர்க்க குழப்பத்துடன், கூப்பிய கரங்களால் பிரார்த்தித்தான்.

அர்ஜூனன்: கிருஷ்ணா, எல்லா உயிர்களும், தேவர்களும் உமது உடலில் அணிவகுத்திருப்பதைக் காண்கிறேன். தாமரையில் பிரம்மா, சிவபெருமான், பல முனிவர்கள், தெய்வீக நாகங்களை நான் காண்கிறேன். எல்லையற்ற உருவங்களை – வயிறுகள், வாய்கள், கண்களுடன் காண்கிறேன். அவைகளுக்கு ஆரம்பமோ, முடிவோ, நடுவோ இல்லை. மகுடங்களாலும், கதைகளாலும், சக்கரங்களாலும் உமது உருவம் சூரியனைப் போன்று ஒளிர்கிறது. காண்பதற்கும் கடினமாக உள்ளது.

நீரே அறியப்பட வேண்டியவர், பரம புருஷர், அகில ஆதாரம். எல்லையற்றவர், நித்ய புருஷர், அறநெறி காப்பவர், ஆரம்பமும் நடுவும் முடிவுமில்லாத மூலம் நீர். உம் கண்களில் சூரிய சந்திரர் உள்ளனர். உம் தேஜஸினால் அகிலம் முழுவதையும் தகிக்கிறீர்.

ஒருவரே எனினும் எங்கும் நிறைந்துள்ளீர். உம் பயங்கரத் தோற்றத்தினால் கிரஹ மண்டலங்கள் நடுங்குகின்றன. தேவர்கள் அச்சத்துடன் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு உம்மைச் சரணடைகின்றனர். சிவபெருமானின் தோற்றங்களும், ஆதித்யர்களும், வசுக்களும், சாக்கியர்களும், விஸ்வதேவர்களும், அஸ்வினிகளும், மருத்துக்களும், முன்னோர்களும், கந்தர்வர்களும், யட்சர்களும், அசுரர்களும், சித்தர்களும் வியப்புடன் காண்கின்றனர். லோக தலைவர்கள் உமது தோற்றத்திலான முகங்கள், கண்கள், வாய்கள், பற்கள், புஜங்கள், வயிறுகள், கால்கள் இவற்றைக் கண்டு நடுங்குகின்றனர். ஓ விஷ்ணுவே, என் மனதை இனியும் அமைதிப்படுத்த முடியாது. வானளாவிய வர்ணங்கள், கண்கள், வாய்களுடன் நிற்கும் உம்மைக் கண்டு அஞ்சுகிறேன். தேவாதி தேவா, உலகின் புகலிடமே, என்மீது கருணை காட்டுவீராக. மரணம் போல எரியும் உமது முகங்களையும், பற்களையும் எல்லா திக்குகளிலும் கண்டு என் மனம் நடுக்கமுறுகிறது.

சக மன்னர்களுடன் திருதராஷ்டிர புத்திரர்களும், பீஷ்மரும், துரோணரும், கர்ணனும் மற்றும் நமது வீரர்கள் அனைவரும் உமது வாயினுள் புகுவதால், பயங்கரமான பற்களால் அவர்களின் தலைகள் சிதைகின்றன. நதிகள் கடலில் மறைவதுபோல் கொதிக்கும் உமது வாய்களில் விழுநது அவர்கள் அழிகின்றனர். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள் போல் மக்கள் உம் வாய்களில் நுழைகின்றனர். அகிலங்களைக் தகிக்கும் தேவாதிதேவா, நீர் யார்? உம் நோக்கமென்ன?

பகவான்: உலகை அழிக்கும் காலம் நான். போரிடுபவரில் உங்களைத் தவிர இருதரப்பினரும் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் அம்பெய்பவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறுமனே போரிட்டு, வெல்.

சஞ்சயன்: இறைவனின் வார்த்தைகளைக் கேட்ட அர்ஜூனன், கூப்பிய கரங்களுடன் நடுங்கியபடி கூறினான்.

அர்ஜூனன்: ஹ்ருஷீகேசா, உம் புகழ் கேட்டு உலகம் மகிழ்கிறது. பக்குவமானவர்கள் உம்மை வணங்கும் நேரத்தில் அசுரர்கள் உம்மைக் கண்டு ஓடுகின்றனர். பிரம்மாவிற்கும் மூத்தவரே, எல்லையற்றவரே, தேவாதிதேவா, ஜகந்நிவாசா, ஜடத்தோற்றத்திற்கு உன்னதமான வெல்லமுடியாத காரணம் நீர். நீரே ஆதி புருஷர், பகவான், பிரபஞ்சங்களின் புகலிடம், அறிபவர், அறியப்படவேண்டியவர். இயற்கைக்கு மேம்பட்டவர், பிரபஞ்ச தோற்றம் உம்மால் புகப்படுகின்றது. காற்று, நெருப்பு, நீர், சந்திரன் அனைத்தும் நீரே. முன், பின்னிருந்தும், எல்லாத் திசைகளிலிருந்தும் உமக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள். கட்டற்ற வலிமையே, எல்லையற்ற திறனின் இறைவா, அனைத்தும் நீரே.

உமது வைபவங்களை அறியாது, கடந்த காலத்தில் நான் பந்தத்தாலோ, பிரேமையாலோ, கிருஷ்ணா, மாதவா, நண்பா என்றெல்லாம் அழைத்திருந்தேன். விளையாடியபோதும், படுத்திருந்த போதும், உட்காந்திருந்த போதும், உணவருந்தும் போதும், தனிப்பட்டோ அல்லது பிறர் முன்னிலையிலோ பலவாறு உம்மை நான் அவமதித்திருக்கிறேன். அவைகளை மன்னித்தருள்வீராக.

ஜடத்தோற்றத்தின் தந்தையும், மதிப்புக்குரிய தலைவரும், ஆன்மீக ஆசிரியரும் நீர். உமக்கு நிகரும், உயர்ந்ததும் ஏதுமில்லை. மூவுலகிலும் நீர் அளவிட இயலாதவர். பரம புருஷர், ஜீவர்களால் வணங்கப்பட வேண்டியவர். போற்றத்தக்க உம்மிடம் அருளை யாசிக்கிறேன். மைந்தனுக்கு தந்தை போலும், நண்பனுக்கு நண்பன் போலும், காதலிக்கு காதலன் போலும் உமக்கு நான் செய்தவைகளைப் பொறுப்பீராக.

இதுவரையில் நான் காணாததைக் கண்டு மகிழ்வினும், அச்சத்தினால் நடுங்குகிறேன். எனவே கருணையுடன் இவ்வுருவை நீக்கி உமது இறை உருவைக் காண்பித்தருள்க. மகுடம், சங்கு, சக்கர, கதை, தாமரையுடன் நாற்கரங்கள் கொண்ட அத்திருவுருவைக் காண ஆவலுடனுள்ளேன்.

பகவான்: அன்பனே அர்ஜூனா, எனது எல்லையற்ற விஸ்வரூபமானது எனது அந்தரங்க சக்தியால் உனக்கு காண்பிக்கப்பட்டது. இதற்குமுன் இதை யாரும் கண்டதில்லை. வேதப்பயிற்சியாலோ, தான, தவங்களாலோ, பிற செயல்களாலோ இவ்வுருவம் காணப்படக்கூடியதல்ல. நடுக்கத்திலிருந்து விடுபட்டு, அமைதியாக நீ விரும்பிய வடிவில் என்னைக் காண்.

சஞ்சயன்: இங்ஙனம் கூறிய பகவான், நாற்கரங்களுடனான – இறைவடிவான நாராயண தோற்றத்தில் அருளினார். பின் அச்சத்துடனிருந்த அர்ஜூனனை உற்சாகப்படுத்த அனைத்துக்கும் மூலத்தோற்றமான இருகரங்கள் கொண்ட கிருஷ்ண உருவைக் காட்டினார்.

அர்ஜூனன்: கிருஷ்ணா, மனிதர் போன்ற உமது இத்திருவுரு கண்டு என் மனம் அமைதியுற்றது. நான் இப்போது சுய இயல்பிலுள்ளேன்.

பகவான்: அர்ஜூனா, நீ காணும் இவ்வுருவானது காண்பதற்கு கடினமானது. தேவர்களும் இதைக் காண ஏங்குகின்றனர். உன் தெய்வீகக் கண்களால் நீ காணும் இத்தோற்றமானது வேத பாராயணங்களாலோ, கடுந்தவங்களாலோ, தானங்களாலோ, வழிபாட்டினாலோ விளைவதன்று.

எனக்காற்றும் கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே என்னை இவ்வாறு புரிந்து கொள்ள இயலும்; நீ உன்முன் காணும் இது போன்ற தோற்றத்தைக் காண இயலும். என்னைக் குறித்த ரகசியத்திலும் உட்புக முடியும்.

அர்ஜூனா, மனக் கற்பனைகளின் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, எல்லா உயிர்களையும் நேசிப்பவனும், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனுமான ஒருவன் நிச்சயமாய் என்னை வந்தடைகிறான்.

கடுகு.காம்…….. www.kadugu.com

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.