நானே முதற்காரணம் என்பதால், தேவர்களோ, முனிவர்களோ எனது வைபவங்களை அறியார்.
என்னை லோகங்களுக்கெல்லாம் இறைவனாகவும், ஆதியாகவும், பிறவாதவனாகவும் அறிபவன் – மனிதருள் மயக்கமற்றவன் ஆவான். அவன் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, வாய்மை, புலனடக்கம், அமைதி, இன்ப துன்பங்கள், பிறப்பு, இறப்பு, அச்சம், அஞ்சாமை, அகிம்சை, சமநோக்கு, திருப்தி, தவம், தானம், புகழ், இகழ் அனைத்தும் என்னாலேயே உண்டாக்கப்படுகின்றன.
மஹரிஷிகள் எழுவர், அவர்களுக்கு முந்தைய முனிவர் நால்வர், மற்றும் மனுக்களும் எனது மனதிலிருந்து உதித்தவராவர். ஜீவராசிகள் அனைவரும் அவர்களிடமிருந்தே தோன்றினர்.
(மஹரிஷிகள்: வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், கச்யபர், பரத்வாஜர். முனிவர்கள் : ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர். மனுக்கள்: 14 பேர்)
எனது வைபவங்களை அறிபவன், சந்தேகமின்றி எனக்கு பக்தித் தொண்டாற்றுகிறான். அனைத்துக்கும் நானே உற்பத்தி மூலமாவேன். அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதையறிந்த அறிஞர்கள் இதயபூர்வமாக எனது தொண்டில் ஈடுபடுகின்றனர்.
தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னிலேயே உள்ளன. எனக்காக வாழும் அவர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றிப் பேசுவதிலும், உபதேசித்துக் கொள்வதிலும் பெரும் திருப்தியும், ஆனந்தமும் கொள்கின்றனர்.
என்மேல் பக்தி கொண்டு அன்புடன் என்னை வழிபடுவோருக்கு, என்னை அடைவதற்கான வழியை வழங்குகிறேன். கருணையுடன் அவர்கள் இதயத்திலிருந்தபடி, அங்கிருக்கும் அறியாமை இருளை, ஞான தீபத்தால் போக்குகிறேன்.
அர்ஜூனன்: நீரே பரப்பிரம்மம், இறுதியான புகலிடமும், தூய்மைப்படுத்துபவரும், மெய்ப்பொருளும், நித்தியமான பரம புருஷருமாவீர்; ஆதிதேவர், பிறப்பற்ற மூலபுருஷர், எங்கும் நிறைந்த அழகு. உம்மைக் குறித்து நாரதர், கணாதர், தேவலர், வியாசர் போன்ற பெரு முனிவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளனர். இப்போது நீரே அதைக் கூறுகின்றீர், கேசவா, நீர் கூறிய அனைத்தையும் உண்மையென அப்படியே ஏற்கிறேன். தேவர்களோ, அசுரர்களோ உமது இயல்பை அறிவதில்லை.
அகில நாயகா, பரத புருஷரே, தேவாதிதேவா, ஆதிமூலமே, உமது சுயசக்தியால் உம்மை உள்ளபடி அறிகிறீர்.
எத்தகைய மகிமைகளால் நீர் எங்கும் நிறைந்திருக்கிறீரோ, அவற்றை எனக்கு விவரிப்பீராக. நான் உம்மை எங்கனம் தியானிப்பது? எவ்வுருவில் உம்மை நினைப்பது? ஜனார்த்தனா, இதனை மீண்டும் கூறுவீராக. அமுதமாகிய உமது சொற்களைக் கேட்பதில் நான் சலிப்படைவதே இல்லை.
பகவான்: அர்ஜூனா, எனது வைபவங்கள் எல்லையற்றவை. அவற்றில் சிலவற்றைக் கூறுகிறேன்.
குடாகேசா (அயர்வை வென்றவன்), எல்லா ஜீவர்களின் இதயத்திலும் நான் ஆன்மாவாய் உள்ளேன். உயிர்களின் ஆரம்பம், இடை, இறுதியும் நானே. ஆதித்யர்களுள் நான் விஷ்ணு. ஒளிர்பவைகளில் நானே சூரியன். வாயு தேவதைகளுள் நானே மரீசி. நட்சத்திரங்களுள் சந்திரன் நான். வேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு நான்.
ருத்திரர்களுள் நானே சங்கரன். யட்ச ராட்சசர்களில் நிதிக் காப்பாளனான குபேரன் நான். வசுக்களில் நெருப்பு நான். சிகரங்களில் மேரு. புரோகிதர்களில் பிருஹஸ்பதி. படைத்தலைவர்களுள் முருகன் நான். நீர் நிலைகளில் சமுத்திரம். பெரு முனிவர்களில் பிருகு நான். சப்தங்களில் ஓம் நான். யாகங்களில் புனித நாம ஜபம் நான். அசையாதவற்றுள் இமயமாக இருக்கிறேன்.
மரங்களில் நான் ஆலமரம். தேவ முனிவர்களில் நாரதன். கந்தர்வரில் நான் சித்ரரதன். சித்தர்களில் கபிலமுனி நான். குதிரைகளில் அமிர்தத்தில் தோன்றிய உச்சைச்சிரவஸ். பட்டத்து யானைகளில் ஐராவதம் நான். மனிதருள் மன்னன் நான். ஆயுதங்களில் வஜ்ராயுதம் நான். பசுக்களில் சுரபி நான். இனவிருத்தியாளருள் காதற்கடவுள் மன்மதன் நான். சர்ப்பங்களில் வாசுகி நான். தெய்வீக நாகங்களில் நான் அனந்தன். நீர்வாழ் தேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அர்யமா. நீதிபதிகளில் யமன் நான்.
அசுரர்களில் பெரும் பக்தரான பிரஹலாதன் நான். அடக்கி ஆளுபவற்றுள் நான் காலம். விலங்குகளுள் சிம்மம் நான். பறவைகளில் கருடன் நான். தூய்மைப்படுத்துபவற்றுள் காற்று நான். ஆயுதம் ஏந்துவோரில் நான் ராமனாகவும், மீன்களில் மகரமாகவும், நதிகளில் கங்கையாகவும் நான் உள்ளேன். படைப்புகளில் ஆதி, அந்தம், நடுவாக இருக்கிறேன். அனுபவ அறிவில் ஆன்ம அறிவாக நான் உள்ளேன். விவாதிப்போரில் முடிவான உண்மையாக இருக்கிறேன்.
எழுத்துக்களில் அகரம் நான். கூட்டுச்சொற்களில் இரு சொல் நானே. தீராக்காலமும் நானே. படைப்போரில் பிரம்மனாக இருக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். இனியும் உண்டாகக்கூடிய உற்பத்தியாளனும் நான். பெண்களில் புகழ், அதிர்ஷ்டம், அழகிய பேச்சு, ஞாபக சக்தி, அறிவு, பொறுமை நான்.
மந்திரங்களில் பிருஹத் ஸாமம் நான். கவிதைகளில் காயத்ரி, மாதங்களில் மார்கழி, பருவ காலங்களில் வசந்த காலம். வஞ்சகரில் சூது நான். ஒளிர்வனவற்றில் தேஜஸ் நான். நானே வெற்றியும், தீரச்செயலும், வலிமையும் ஆவேன். விருஷ்ணி குலத்தில் வாசுதேவன் நான். பாண்டவர்களில் அர்ஜூனன் நான். முனிவர்களில் வியாசர் நான். சிந்தனையாளர்களில் உஷநா. தண்டிப்பவற்றுள் செங்கோல் நான். வெற்றியை வேண்டுவோரிடம் நீதி நான். ரகசியங்களில் மெளனம் நான். ஞானிகளின் ஞானம் நானே.
இருப்பவைகள் அனைத்திற்கும் உற்பத்தி விதை நானே. அசையும், அசையா எவையும் நானின்றி இல்லை. எதிரிகளை வெல்பவனே, எனது வைபவங்களுக்கு எல்லையில்லை. அவற்றுள் சில உதாரணங்களையே இப்போது கூறினேன். அழகும், மகிமையும், வலிமையும் பொருந்திய எதுவாயினும் அவை எனது தேஜஸின் ஒரு சிறு பொறியிலிருந்தே வந்தவையாகும். ஒரு சிறு பின்னப் பகுதியால் நான் பிரபஞ்சம் முழுவதையும் தாங்குகிறேன்.