இந்த ஞானமே, அறிவின் அரசன். ரகசியங்களில் ராஜா. உத்தமமானது; தூயது; நடைமுறையில் உணரப்படக்கூடியது. தர்மங்களில் முழுமையானது. அழிவற்றது. மிக்க இன்பத்துடன் செயலாற்றக் கூடியது.
பக்திப் பாதையில் நம்பிக்கையற்றவன் என்னை அடைய முடியாது. அவன் இறப்புக்குப் பின் ஜனன, மரணம் நிறைந்த இந்த ஜடவுலக்குக்கே திரும்புகிறான்.
இவ் அகிலம் எல்லாம் அகிலமறியாத எனது தோன்றா உருவில் என்னால் புகப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவர்களும் என்னில் இருக்கின்றன. ஆனால் அவைகளில் (சார்ந்து) நான் இல்லை. படைக்கப்பட்டவைகளும் என்னில் ஆழ்ந்து இல்லை. எனது யோக மகிமைகளைப் பார். உயிர்களைக் காப்பவனாகவும், எங்கும் நிறைந்தும் நான் இருப்பினும், படைப்பின் மூலகாரணமாகவும் நான் உள்ளேன்.
எங்கும் வீசிக்கொண்டிருக்கும் காற்று, ஆகாயவெளியிலும் நிறைந்திருப்பது போல் எல்லாம் என்னில் அமைந்துள்ளன.
கல்ப முடிவில் ஜடத்தோற்றங்கள் என் இயற்கையில் நுழைகின்றன. அடுத்து கல்ப ஆரம்பத்தில் அவையெல்லாம் எனது இயற்கையால் மீண்டும் படைக்கப்படுகின்றன. இந்த ஜடத்தோற்றங்கள் எல்லாம் எனக்குக் கட்டுப்பட்டவை. எனது எண்ணப்படி அவை படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. நான் நடுநிலையுடன் விலகியிருந்து செயலாற்றுவதால், இச்செயல்கள் என்னைப் பாதிப்பதில்லை.
எனது மேற்பார்வையில் இந்த ஜட இயற்கை இயங்குகிறது. அதுவே அசையும், அசையா எல்லா உயிரினங்களையும் உருவாக்கி மறைக்கிறது.
எனது உன்னத இயற்கையையும், மஹேஸ்வரத் தன்மையையும் அறியாத மூடர்கள், நான் மனித உருவில் தோன்றும் போது சாதாரண மனிதன் போல் எண்ணி, என்னை அவமதிக்கின்றனர்.
இவ்வாறு நோக்கத்தில் குழப்பம் கொண்ட அவர்கள் ராட்சதத்தனமான நாத்திகக் கருத்துக்களால் கவரப்பட்டு, அவர்களது கர்ம, ஞானப் பயிற்சிகள் எல்லாம் வீணாகின்றன.
ஆனால் குழப்பம் அடையாத மஹாத்மாக்களோ என்னைப் பகவானாக ஏற்று, எனது இயற்கையின் பாதுகாப்பின், எனது பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் எப்போதும் என் புகழ் பாடி, உறுதியுடன் முயன்று, என்னை பக்தியுடன் வணங்கி வழிபடுகின்றனர்.
அறிவை விருத்தி செய்துகொள்ளும் பலர், என்னை தனிப்பட்டவராயும், பல்வேறுபட்டவராயும், விஸ்வ ரூபத்திலும் வழிபடுகின்றனர். (தனிப்பட்டவர் – இறைவனின் சுயவடிவான கிருஷ்ணர், பல்வேறுபட்ட நிலை – ஜீவர்களின் இதயவாசியான பரமாத்மா, விஸ்வ நிலை – எங்கும் பரவி இருக்கும் பிரம்மம்).
வேதச் சடங்குகளும், யாகமும், முன்னோருக்குப் படைக்கப்படும் பொருட்களும், நோய் தீர்க்கும் மூலிகைகளும், மந்திர சப்தங்களும் நானே; நானே யாகத்தின் வெண் நெய்யாகவும், நெருப்பாகவும், நிவேதனமாகவும் இருக்கின்றேன்.
நானே ஜகத்திற்கு தந்தையும், தாயும், முன்னோனும் ஆவேன். அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், ஓம் எனும் மந்திரமும் நானே; ரிக், யஜூர், சாம வேதங்களும் நானே.
நானே அனைத்திற்கும் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும், உறைவிடமாகவும், புகலிடமாகவும், இலக்காகவும், சாட்சியாகவும், அழியாத வித்தாகவும், படைப்பு – நிலைப்பு – அழிவாகவும் உள்ளேன்.
ஸ்வர்க்க கிரகங்களை நாடி வேதம் பயின்று சோம பானம் பருகுவோரும் ஒரு விதத்தில் என்னையே வழிபடுகின்றனர். அவர்கள் இந்திரலோகத்தில் தேவ இன்பங்களை அனுபவித்து, புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மீண்டும் நித்தியமற்ற இந்த ஜடவுலக்குக்கே திரும்புகின்றனர். இவ்விதமாக வேதங்களால் அவர்கள் அற்ப சுகமே பெறுகின்றனர்.
ஆனால் எனது திவ்வியமான உருவைத் தியானித்து பக்தியுடன் என்னை வழிபடுவோருக்கு அதிர்ஷ்டமானதைக் கொடுத்தும், கொடுத்ததைக் காத்தும் நான் அருள்கிறேன்.
நம்பிக்கையுடன் ஒருவன் தேவர்களுக்கு யாகமாக படைப்பவைகள்கூட எனக்கானவையே. முழு அறிவின்றி அவைகள் படைக்கப்படுகின்றன.
எல்லா யாகங்களுக்கும் (நற்செயல்களுக்கும்) நானே நோக்கமாகவும், அனுபவிப்பாளனாகவும் உள்ளேன். இதனை அறியாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டுள்ளனர்.
தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர். பேய் பூதங்களை வழிபடுவோர் அவர்களிடையே பிறப்பர். முன்னோர்களை வழிபடுவோர் முன்னோர்களிடையே பிறப்பர். என்னை வழிபடுவோர் என்னுடன் வாழ்வர்.
அன்புடனும், பக்தியுடனும் ஒருவன் ஓர் இலையோ, பூவோ, பழமோ, நீரோ தந்தால் அதை நான் ஏற்கிறேன்.
எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதைப் படைக்கிறாயோ, எதைக் கொடுக்கிறாயோ, எத்தவங்களைப் புரிகிறாயோ – அனைத்தையும் எனக்கு அர்ப்பணமாகச் செய். இதனால் எல்லா நல்ல, தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதுடன் என்னை அடைவாய்.
எல்லா உயிர்களுக்கும் நான் சமமானவன். யாரிடமும் நான் விருப்பு, வெறுப்பு கொள்வதில்லை. ஆனால் எனது தொண்டில் ஈடுபட்டிருப்பவன் எனக்கு நண்பன்; அவன் என்னில் இருக்கிறான்; நான் அவனுக்குப் பிரியமானவன்.
மிகவும் கெட்ட நடத்தை கொண்டவன் கூட எனது தொண்டில் ஈடுபட்டிருந்தானாகில், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் நல்ல முடிவுக்கு வந்து விட்டான்.
பார்த்தனே, பாப யோனியில் பிறந்திருந்தாலும் பெண்கள், வணிகர்கள், கடும் தொழிலாளர்கள் என்னிடம் அடைக்கலம் கொண்டால் நித்ய கதி அடைவர். அப்படியிருக்கையில் இவ்வுலகில் எனது தொண்டில் ஈடுபட்டிருக்கும் புனிதர்கள், பக்தர்கள், அந்தணர், ராஜரிஷிகள் ஆகியோர் எவ்வளவு சிறந்தவர்.
உன் மனதை எப்போதும் என்னில் வை. என் பக்தனாகி எனக்கு வந்தனைகள் செய்து வழிபடு. இவ்விதம் என்னில் ஆழ்ந்து நிச்சயம் நீ என்னிடம் வருவாய்.