கடுகு

மே 8, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 8 - அட்சரப் பிரம்ம யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
அர்ஜூனன்: புருஷோத்தமா, பிரம்மம், ஆன்மா, கர்மம், ஜடத்தோற்றம் என்பன என்ன? தேவர்கள் யார்? யக்ஞபதி உடலின் எங்குள்ளார்? அன்புத்தொண்டு புரிபவர்கள் இறுதிக்காலத்தில் எங்ஙனம் உம்மை அடைகின்றனர்?

பகவான்: அழிவற்ற உன்னத ஜீவான்மாவே பிரம்மம். அதன் இயற்கையே ஆன்மா. ஜட உடல்களின் உற்பத்தி சம்பந்தமான செயல்கள் கர்மம் ஆகும்.

ஜடத்தோற்றம் முடிவற்ற மாற்றங்களுடையது. அது அதிபூதம் எனப்படும். சூரிய சந்திரர் மற்றும் தேவர்கள் அவர்களின் லோகங்கள் உள்ளிட்டதாக விளங்கும் இறைவனின் அகில உருவம் அதிதைவம் எனப்படும். ஜீவர்களின் இதயங்களில் இறைவனது பிரதிநிதியான பரமாத்வாக (அதியக்ஞம்) இருப்பதும் நானே.

இறுதிக்காலத்தில் என்னையே எண்ணியபடி உடலை விடுபவன் எனது இயற்கையை அடைகிறான். உடலை விடும்போது எத்தகைய உணர்வுகளுடன் விடுகிறானோ அந்நிலையை அடுத்த வாழ்வில் அடைகிறான்.

எனவே அர்ஜூனா, என்னை இவ்வுருவில் கண்டு, கடமையைச் செய். மனம் புத்தியை என்னில் நிறுத்தி, செயலை எனக்கு அர்ப்பணித்து, சந்தேகமின்றி என்னை அடையலாம்.

பார்த்தனே, பரம புருஷரைத் தியானித்து, என்னை எண்ணுவதில் மனதை நிறுத்தியவன் – பிறழாது பயிற்சி செய்பவன் உறுதியாக என்னை அடைகிறான்.

பரம புருஷரான இறைவனை ஒரு நபராகவும், எல்லாம் அறிந்தவராகவும், மூத்தவராகவும், பரம் ஆளுனராகவும், அணுவினும் அணுவாகவும், அனைத்தையும் காப்பவராகவும், ஜட இயற்கைக்கும், எண்ணங்களுக்கும், ஆய்வுக்கும் அப்பாற்பட்டவராகவும், உன்னதமானவராகவும், சூரியன் போன்று பிரகாசிப்பவராகவும் தியானிக்க வேண்டும்.

இறக்கும் தருவாயில் உள்மூச்சை புருவமத்தியில் நிறுத்தி பக்தியுடன் பரமபுருஷரை எண்ணுபவன் நிச்சயமாக அவரை அடைகிறான்.

வேத வித்துக்களும், பற்றற்ற துறவியரும், பிரம்மத்தில் புகும் பக்குவத்தை அடைவதற்காக சிற்றின்பத்தைத் துறக்கின்றனர். விடுதலைக்கான இம்முறையை நான் உனக்குக் கூறுகிறேன்.

புலன் வாயில்களை அடக்கி, மனதை இதயத்திலும், பிராணனை தலையுச்சியிலும் நிறுத்தி, யோக நிலையில் அமர்ந்து, ஓங்காரத்துடன் என்னை எண்ணியபடி உடலை விடுபவன் உறுதியாக உன்னதத் தலத்தை அடைகிறான்.

மாறுபடாத நோக்கமின்றி பக்தித்தொண்டில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவனுக்கு நான் எளிதில் அடையப்படக் கூடியவனாயிருக்கிறேன்.

பக்குவமடைந்த அத்தகைய பக்தியோகிகளான மஹாத்மாக்கள், என்னை அடைந்தபின் துன்பம் நிறைந்த இத் தற்காலிக உலகுக்குத் திரும்ப வருவதில்லை. இங்கிருந்து பிரம்மலோகம் வரை பிறப்பு இறப்புத் துயருண்டு. என்னை அடைபவன் மீண்டும் பிறப்பதில்லை. (பிரம்மலோகம் வரை கீழிருந்து மேலாக 14 அடுக்கு கிரக கூட்டங்கள் உள்ளன. கீழே அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, பாதாள என்றும், மேலே பூ, புவ, ஸ்வ, மஹ, தப, ஜன, சத்ய (பிரம்ம லோகம்) என்றும் லோகங்கள் உள்ளன. கீழிருந்து மேலாக எட்டாவது அடுக்கில் பூலோகம் உள்ளது).

மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் (432 கோடி ஆண்டுகள்). அதுபோன்ற காலம் அவருக்கு ஓரிரவாகும். அவரது பகலில் ஜீவர்கள் தோன்றி, இரவில் மறைகின்றனர்.

தோன்றி மறையும் இவ்வுலகங்களுக்கு மேலாக திவ்வியமான, நித்தியமான ஓர் உலகு உள்ளது. அகிலங்கள் அழிகையில் அது அழிவதில்லை. என் இருப்பிடமான அதுவே ஆன்மாக்களின் இறுதி இலக்கு.

பரமபுருஷரான இறைவன் தூய பக்தியினால் அடையப்படக் கூடியவர். தனது லோகத்தில் அவர் இருப்பினும் எங்கும் நிறைந்துள்ளார். எல்லாம் அவரில் அமைந்துள்ளன.

எக்காலத்தில் உடலை விட்டாலும் மீண்டும் இவ்வுலகுக்கு ஒருவன் வருவானோ / வரமாட்டானோ அதைக் கூறுகிறேன்.

பரப்பிரம்மத்தை அறிபவன், கதிரவனின் ஆதிக்கத்தில் ஒளிபொருந்திய நேரத்தில், வளர்பிறையின் இருவாரங்களில், சூரியன் வடக்காகச் செல்லும் ஆறு மாதங்களில் ஜட உலகிலிருந்து உடலை விட்டுச் செல்கிறான்.

புகை நேரத்தில், இரவில், சந்திரனில்லாத அமாவாசையைச் சேர்ந்த இருவாரங்களில், சூரியன் தெற்காகச் செல்லும் ஆறு மாதங்களில், உலகை விட்டுச் செல்லும் யோகிகளும், சந்திரலோகத்தை அடைவோரும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்.

ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை, இருளின் நீங்குபவன் மீண்டும் வருகிறான் என வேதங்கள் கூறுகின்றன.

இவ்விரு வழிகளையும் அறிந்துள்ள பக்தர்கள் குழப்பமடைவதில்லை. எனவே எப்போதும் பக்தியில் நிலைத்திரு.

வேதம் பயிலல், யாகம் செய்தல், தான தவம் புரிதல், கர்ம, ஞான பாதைகளை மேற்கொள்ளல் – இவற்றால் அடையப்படும் விளைவுகளை பக்திப்பாதையில் உள்ள ஒருவன் இழப்பதில்லை. அவன் மூல ஸ்தானமான பரமபதம் அடைகிறான்.

கடுகு.காம்…….. www.kadugu.com

1 மறுமொழி »

  1. vanakkam, ithai padithathinal palan

    kaalam viraiyam

    Comment by thamilannan — மே 11, 2008 @ 8:17 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.