கடுகு

மே 7, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 7 - ஞான விஞ்ஞான யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
பார்த்தனே, என் உணர்வில், என் மீது பற்றுடன் யோகத்தைப் பயில்வதால் சந்தேகமின்றி என்னை அறியலாம்.

இப்போது நான் தெரிவிப்பதை நீ அறிந்து கொண்டால், இனி எதையும் நீ அறிய வேண்டியதில்லை. அத்தகைய நுட்பமான அறிவை முழுமையாகக் கூறுகிறேன் கேள்.

கோடியில் ஒருவனே பக்குவமடைய முயல்கிறான். அவர்களுள்ளும், யாரோ ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் – இவை எட்டும் எனது பிரிந்த கீழான இயற்கையாகும்.

கீழான இயற்கையுடன் போராடியபடி, இவ்வுலகத்தைத் தாங்கும் எனது மேலான இயற்கை உயிரினங்கள் இருக்கின்றன.

இவ்விரு இயற்கைகளுக்கும் தோற்றத்திற்கான மூலமாகவும், பிரளயத்தின்போது ஒடுங்கும் இருப்பிடமாகவும் நான் இருக்கிறேன்.

என்னிலும் மேலான உண்மையில்லை. நூலின் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல் எல்லாம் எனைச் சார்ந்துள்ளன.

நானே நீரின் சுவை, சூரிய சந்திரரின் ஒளி, வேத மந்திரங்களின் பிரணவம் (ஓம்). வானில் சப்தமாகவும், மனிதருள் திறனாகவும் உள்ளேன்.

நிலத்தின் வாசனை நான்; நெருப்பின் வெப்பம் நான்; உயிரினங்களின் உயிரும், தவம் புரிவோரின் தவமும் நானே.

எல்லா உயிரினங்களின் மூலவிதை நானே. அறிஞர்களின் அறிவும், பலவான்களின் பலமும் நானே.

பரதர்களின் தலைவா, பலவீனர்களைக் காக்கும் பலவான்களின் பற்றும், பற்றற்றவர்களது பலமும் நானே, அறநெறிகளுக்கு உட்பட்ட காமமும் நானே.

சத்வ, ரஜோ, தமோ எனும் முக்குணங்களுக்குட்பட்ட எதுவாயினும் எல்லாமே எனது சக்தியிலிருந்து உண்டானவை. ஒருவிதத்தில் நானே எல்லாமே எனினும், நான் குணங்களுக்கு உட்பட்டவனல்ல.

முக்குணங்களால் மயக்கப்பட்டிருப்பதால், எல்லையற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட என்னை உலகம் அறியாதிருக்கிறது.

முக்குணங்களால் ஆன எனது மாயை கடக்க முடியாதது; எனினும் என்னைச் சரணடைந்தோர் எளிதில் கடக்கலாம்.

அறிவில்லாத மூடர்கள், அறிவில் கடைத்தரமானவர்கள், அறிவு திசை மாறியவர்கள் மற்றும் ஆன்ம அறிவே இல்லாதவர்கள் (நாத்திகர்) என நால்வித தீயோர் என்னைச் சரணடைவதில்லை.

நால்வித நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர் – துன்பம் தாங்காதோர், வினாவுடையவர், பொருளாசை கொண்டவர், இறைவனைத் தேடுபவர்.

இவர்களில் தூய பக்தித் தொண்டாற்றும் முழு ஞானம் உடையவன் சிறந்தவனாவான். நான் அவனுக்கு பிரியமானவன். அவனும் எனக்கு மிகப்பிரியமானவன்.

இவர்கள் நல்லோராயினும் என்னைக் குறித்த அறிவில் நிற்பவனை என்னிலேயே வாழ்பவனாக நான் கருதுகிறேன். எனது தொண்டில் ஈடுபட்டு அவன் என்னையே அடைகிறான்.

பல பிறவிகளுக்குப் பின்னரே உண்மையான அறிவாளி, காரணங்களுக்கெல்லாம் முதற்காரணமாக என்னை அறிந்து, என்னைச் சரணடைகிறான். அத்தகு சிறப்புடையவன் மிக அரிதானவன்.

ஆசைகளால் அலைபாயும் மனதினர் தேவர்களுக்குச் சரணடைந்து தமது இயல்புகளுக்கேற்ப வழிபாட்டு முறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். எல்லோரது இதயத்துள்ளும் நான் பரமாத்வாக இருப்பதால், அவர்களின் நம்பிக்கையையும் நானே உறுதியாக்குகிறேன். அத்தகு நம்பிக்கையுடன் அவன் தேவர்களிடம் பலன் பெற்றுச் செல்கிறான். அப்பலன்கள் உண்மையில் என்னால் வழங்கப்படுபவையே.

குறைமதியாரே தேவரை வழிபடுவர். தேவர்கள் மூலம் அவர்கள் பெறும் நன்மைகளும் எல்லைக்குட்பட்டவை; தற்காலிகமானவை. தேவர்களை வழிபடுவோர் தேவரை அடைவர். என் பக்தர்களே என்னுலகை அடைவர்.

அறிவற்றவர்கள், எனக்கு உருவமில்லாததாகவும், குறிப்பிட்ட உருவத்துடன் வந்து போவதாகவும் எண்ணுகின்றனர். மூடத்தனத்தினால் எனது மேலான இயல்புகளையும், நித்தியத் தன்மையினையும் அறியாதிருக்கின்றனர்.

குறைமதியோருக்கு நான் தோன்றுவதே இல்லை. எனது யோக சக்தியால் அவர்களுக்கு நான் மறைக்கப்பட்டுள்ளேன். மயங்கிய நிலையில் இருப்போர் பிறவாத, இறவாத என்னை அறிவதில்லை.

நான் நடந்தவை, நடப்பவை, நடக்கப் போவற்றையெல்லாம் அறிவேன். எல்லா ஜீவன்களையும் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்.

பிறவி பெற்ற காலம் முதல், ஜீவர்கள் இருமைகளுக்கு ஆட்பட்டு மயங்கியுள்ளனர்.

முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நற்செயல்களில் ஈடுபட்டு எவர்களது பாபம் முழுதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதோ, இருமை மயக்கத்திலிருந்து எவர் விடுபட்டுள்ளனரோ அவர்களே எனது தொண்டில் உறுதியுடன் ஈடுபடுவர்.

முதுமை, மரணத்திலிருந்து விடுபட முயலும் அறிவுடையோர் எனக்கு பக்தித் தொண்டு புரிகின்றனர். சரியான அறிவைப் பெற்றுள்ளதால் அவர்கள் பிரம்ம உணர்வுடையவர் ஆவர்.

என்னையே பரம் புருஷராக, ஜடத் தோற்றங்களை ஆளும் நபராக, தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாக, யக்ஞபதியாக (யாகங்களின் இறைவனாக) என்னை உணர்ந்தவன், இறுதிக்காலத்திலும் என்னை அறியலாம்.

கடுகு.காம்…….. www.kadugu.com

1 மறுமொழி »

  1. Can I see full version of Bhagavadgita in above pattern?

    Comment by P.JAYARAMAN — மே 14, 2008 @ 1:48 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.