கடுகு

மே 5, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 6 - ஸாங்க்ய யோக பாதை

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 1:00 பிற்பகல்
கர்ம பலனில் கவனமின்றி கடமைக்காக செயலாற்றுபவனே துறவியும் யோகியும் ஆவான்; மாறாக வேள்வித்தீ மூட்டாதவனும், செயலற்றவனும் அல்ல. துறவும் யோகமே. புலன் திருப்தியை துறக்காதவன் யோகியாக இயலாது.

யோகமுறையின் துவக்க நிலையில், செயல்படுவதே மார்க்கமாகக் கூறப்படுகிறது. ஆனால் பக்குவ நிலைக்கு வந்தபின் செயலைத் துறப்பதே மார்க்கமாகும்.

ஆசைகளைத் துறந்து, புலனுகர்வுச் செயலிலோ, பலன் கருதும் செயலிலோ தொடர்பு கொள்ளாதிருப்பவனே யோகத்தில் உயர்ந்தவனாவான்.

தன் மனதாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்; இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. மனதை வென்றவனுக்கு அது சிறந்த நண்பனாகும், வெல்லாதவனுக்கு அது பெரும் விரோதியாகும்.

அவ்வாறு உயர்ந்தவனுக்கு பரமாத்மா ஏற்கனவே அடையப்பட்டு விடுகிறார். அவனுக்கு இன்ப துன்பம், குளிர் வெப்பம், மான அவமானம் அனைத்தும் சமமாகும்.

பெற்ற ஞானம், உணர்ந்த ஞானம் இவற்றால் நிறைந்திருப்பவனே யோகி. அவன் தன்னுணர்வாலும், தன்னடக்கத்தாலும், கல், மண், பொன் அனைத்தையும் சமமாகக் காண்கிறான்.

நண்பன், எதிரி, துவேஷி, நல்லோன், தீயோன், வேற்றுமையற்றவன், நடுநிலையாளன் போன்ற எல்லோரையும் சமமாய் நடத்துபவன் யோகத்தில் மிக முன்னேறியவனாவான்.

தனியிடத்தில் தனியனாய் அமர்ந்து உடல், உள்ளத்தை அடக்கி, உடைமைகள் குறித்த உரிமை உணர்விலிருந்து விடுபட்டு பரமாத்மா மீது மனதைச் செலுத்த வேண்டும்.

தூய்மையான இடத்தில் தர்ப்பை பரப்பி, அதை மான் தோலால் மூடி, வெண்மையான துணியை மேலே விரித்து அதிக உயரமாகவோ மிகத் தாழ்வாகவோ இல்லாதபடி இருக்கை அமைத்து அதன் மேல் யோகியானவன் உறுதியுடன் அமர்ந்து, மனம், புலன்களைக் கட்டுப்படுத்தி இதயத்தை தூய்மையாக்கி ஒருமுகத்துடன் யோகம் பயில வேண்டும்.

தேகம், தலை, கழுத்து இவற்றை நேராக வைத்தமர்ந்து நாசி நுனியில் பார்வையை நிறுத்தி, கிளர்வற்ற மனதுடன் பயமின்றி சிற்றின்பத்திலிருந்து விலகி, என்னை எண்ணி, என்னையே இலக்காக்கி யோகி அமர வேண்டும்.

தேகம், மனம், செயலின் போக்கை இவ்வாறு பயின்று, ஜடத்திலிருந்து விடுபட்டு யோகி இறைத்தலம் அடைகிறான்.

அதிகம் உண்பவன், மிகக் குறைவாக உண்பவன், அளவு கடந்து உறங்குபவன், மிக விழித்திருப்பவன் இவர்கள் யாரும் யோகியாகும் வாய்ப்பில்லை. உணவு, உறக்கம், உழைப்பு, உல்லாசம் இவற்றில் மிதமாக இருப்பவன், யோகப்பயிற்சி மூலம் துன்பங்களை அகற்ற முடியும்.

ஒருவன் பயிற்சியால் மன ஓட்டத்தை நிறுத்தி ஆசையில்லாதவனாக ஆகும் போது பூரண யோகியாக கருதப்படுகிறான்.

காற்று வீசாத இடத்தில் தீபம் அசையாது நிலைத்து எரிவது போல், யோகியின் மனம் தியானத்தில் நிலைத்திருக்கும்.

இப்பக்குவ நிலையே சமாதி எனப்படும். ஒருவனது மனம், ஜட இயக்கத்திலிருந்து விடுபட்டு, ஆன்மாவைக்கண்டு அதில் இன்புறும் தன்மையிலிருந்து இது தெளிவாகிறது. இந்த எல்லையற்ற இன்ப நிலையில் ஆழ்ந்து ஆன்மீகப் புலன்களால் ஒருவன் “தன்னை” அனுபவிக்கிறான். இப்படிப்பட்டவன் இதற்குமேலும் ஏதும் உயர்வு இருப்பதாகக் கருதுவதில்லை. கடும் துன்பங்களிடையேயும் தன்நிலை மாறாதிருக்கிறான். இதுவே ஜடத் துன்பங்களிலிருந்து உண்மையான விடுதலையாகும்.

மாறாத உறுதி – நம்பிக்கையுடன், உரிமை உணர்வின் ஆசைகளை அறவே துறந்து, புலன்களை மனதால் அடக்க வேண்டும். உறுதியுடன் மனதை மெதுவாக ஆழ்நிலையில், வேறெதையும் சிந்திக்காது நிறுத்த வேண்டும்.

எங்கெல்லாம், எவைகளிலெல்லாம் நிலையற்று மனது சஞ்சரிக்கிறதோ அங்கிருந்து அதனை இழுத்து வந்து ஆன்மாவின் கட்டுப்பாட்டினுள் கொணர வேண்டும்.

என்னில் மனதை நிறுத்திய யோகி பேரின்பமடைகிறான். அவன் மனம் அமைதி அடைந்து, எழுச்சிகள் தணிந்து பாபங்களிலிருந்து விடுபடுகிறான்.

எல்லா ஜடக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டு, ஆன்மாவில் நிலைத்து, பரம உணர்வுடன் தொடர்பு கொண்ட யோகி பிரம்மானந்த நிலையை அடைகிறான்.

உண்மையான யோகி தன்னுணர்வால், என்னை அனைத்திலும், அனைத்தையும் என்னிலும் காண்கிறான். இதனால் அவனுக்கு நான் இழக்கப்படுவதுமில்லை. எனக்கு அவன் இழக்கப்படுவதுமில்லை.

நானும், ஜீவர்களின் இதயத்திலிருக்கும் பரமாத்வாவும் ஒன்றே என்றறியும் யோகி எனக்கு வந்தனைகள் செய்து எல்லா சூழ்நிலைகளிலும் என்னில் நிலைக்கிறான். அவன் தன் பக்குவத்திற்கேற்ப எல்லா உயிர்களையும், அவற்றின் சுக துக்கங்களையும் சமமாகக் காண்கிறான்.

அர்ஜூனன்: மதுசூதனா, தாங்கள் கூறிய யோகமுறை தாங்க முடியாதது; சாத்தியமற்றது. ஏனெனில் மனம் சஞ்சலமானது; சக்தி வாய்ந்தது, காற்றை அடக்குவதைவிட கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.

பகவான்: பலவானே, அமைதியற்ற மனதை அடக்குதல் கடினமெனினும் பயிற்சியாலும், பற்றின்மையாலும் இது சாத்தியம்.

கட்டுப்பாடற்ற மனங்கொண்டவனுக்கு தன்னுணர்வு பெறல் கடினம். ஆனால் கட்டுப்பாடான மனதுடன் முயல்கையில் வெற்றி நிச்சயம். இதுவே என் கருத்து.

அர்ஜூனன்: கிருஷ்ணா, சிரத்தையிருந்தும், உலக உணர்வாலும், முயற்சிக் குறைவாலும் யோகப் பாதையில் வழுவியவன் கதி என்ன? இருவகையிலும் (ஜட, ஆன்மீக) அவன் சிதறிய மேகம் போல் இடமின்றி அழிந்திடுவானே? இதுவே என் ஐயம். இதனை முழுமையாகத் தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பகவான்: பலவானான குந்தி மகனே, நற்செயலில் ஈடுபட்ட ஆன்மீகி எவ்வுலகிலும் அழிவுறுவதில்லை. நண்பா, நல்லவன் தீமையை அடைவதில்லை. தோல்வியுற்ற யோகி நல்லோர் வாழும் உலகில் பல்லாண்டுகள் இன்புற்று, பின் செல்வந்தர் அல்லது நல்லோர் இல்லத்தில் அல்லது ஆன்மீகிகளின் குடும்பத்தில் பிறக்கிறான். இத்தகைய பிறவி உலகில் மிக அரிது. தனது முற்பிறப்பின் உணர்வினால் தொடரப்பட்டு முழு வெற்றிக்கு அவன் முயல்கிறான்.

அவன் நாடாமலேயே முற்பிறவி சாதனைகளால் கவரப்பட்டு சாஸ்திர சடங்குகளினின்றும் மேம்பட்டு நிற்கிறான்.

கடும் பயிற்சியினால் யோகி தன் எல்லா பாவங்களிலிருந்தும் தூய்மையடைந்து, பல பிறவிகளில் அடைந்த பக்குவத்தின் காரணமாக பரம கதியை அடைகிறான். அவன் பலன் நோக்கி செயல்படுவோரை விட, அறிஞர்களைவிட, தபஸ்விகளைவிட மேலானவன். எனவே யோகியாவாயாக.

எனினும், பெரும் நம்பிக்கையுடன் சித்தத்தை என்பால் வைத்து அன்புத் தொண்டால் என்னை வழிபடும் பக்தனே யோகிகளிலெலாம் மிகச் சிறந்தவனும் எனக்கு நெருக்கமானவனுமாவான்.

கடுகு.காம்…….. www.kadugu.com

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.