நீ எனக்கு நண்பனும், பக்தனுமாதலால் இறைத்தொடர்பு பற்றிய இவ்விஞ்ஞானம் இன்று உனக்கு என்னால் கூறப்படுகிறது. இதன் ரகசியத்தையும் உன்னால் புரிந்து கொள்ள முடியும்.
அர்ஜூனன்: பிறப்பினால் உமக்கு முந்தையவர் விவஸ்வான், அவருக்கு நீர் எப்படி உபதேசித்தீர்?
பகவான்: பற்பல பிறவிகளை நாம் கடந்துள்ளோம். அவற்றை நாமறிவோம், நீயறியாய். நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.
எப்பொழுதெல்லாம் அறநெறிகளுக்கு தொல்லைகள் ஏற்பட்டு அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் என்னை நான் இவ்வாறு உருவித்துக் கொள்கிறேன். சாதுக்களைக் காக்கவும், கொடியவர்களை ஓய்ப்பதற்காகவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் யுகந்தோறும் வருகிறேன்.
எனது திவ்யமான பிறப்பு, செயல்கள் இவற்றின் மேலான தன்மைகளை உள்ளபடி அறிபவன், ஜட உடலை விட்டபின் மீண்டும் இங்கு பிறப்பதில்லை, அவன் என்னை அடைகிறான்.
ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.
பலனிச்சையால் மனிதர்கள் தேவர்களைப் பூசிக்கின்றனர். இத்தகு செயல்களுக்கு உடனடி விளைவுகளும் அமைகின்றன.
குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப மனிதரில் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. (பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்). எனினும் மாற்றமில்லாத என்னை, செயலுக்கு அப்பாற்பட்டவன் என்பதை அறிவாயாக.
எச்செயலும் என்னை பாதிப்பதுமில்லை. செயலின் பலனுக்காக நான் ஏங்குவதுமில்லை. இவ்வாறு என்னை அறிபவன் செயலின் விளைவுகளால் கட்டுப்படுவதுமில்லை.
முன்னோர்கள்கூட இவ்விதம் செயல்பட்டு விடுபட்டுள்ளனர். நீயும் அதுபோல மேலான உணர்வுகளுடன் கடமைகளைச் செய்.
செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடக் கூடிய அத்தகைய செயல்களைப் பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.
சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் (கர்மா), விலக்கப்பட்ட செயல்கள் (விகர்மா), மற்றும் விளைவற்ற செயல்கள் (அகர்மா – பகவானுக்காக ஆற்றப்படுபவை) உள்ளன. அறிவதற்கு கடினமாயினும், இவற்றை அறிந்தே ஒருவன் செயல்பட வேண்டும்.
செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவனே அறிஞன். அவன் செயல்பட்டாலும் விடுபட்டவனாவான்.
புலன் நுகர்வுக்கான நோக்கமின்றி செயல்படுபவன் சிறந்தவன். அவன் தனது பக்குவத்தால் விளைவுகளை எரித்து விடுவதால் அறிஞர்கள் அவனைப் போற்றுகின்றனர்.
செயலின் பலனில் பற்றற்று, சதா திருப்தியுடன் சார்பற்று இருப்பவன், செயல்பட்டாலும் செயலற்றவனே ஆவான்.
அப்படிப்பட்டவனது மனதும் அறிவும் கட்டுப்பட்ட நிலையில் உரிமை உணர்வின்றி குறைந்தபட்சத் தேவைகளுக்காக செயலாற்றுகிறான். அவன் தீய விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.
தானாய்க் கிடைப்பதில் திருப்தி அடைந்தவன், இருமைகளிலிருந்து விடுபட்டவன், பொறாமையற்றவன், வெற்றி – தோல்விகளில் சமமாய் இருப்பவன் – இவன் செயலாற்றினாலும் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.
பரம புருஷரின் திருப்திக்காக செய்யப்படும் செயல்களுக்கு ஜட விளைவுகள் கிடையாது.
கிருஷ்ண உணர்வில் லயிப்பவன் ஆன்மீக உலகை அடைகிறான். ஏனெனில் அவனது செயல்பாடுகளின் லட்சியமும் அதுதான். அவனால் சமர்ப்பிக்கப்படும் எதுவும் ஆன்மீக இயல்பு கொண்டதாக இருக்கின்றது.
ஆன்மீகிகளில் சிலர் தேவர்களுக்காகவும், சிலர் பரம்பொருளுக்காகவும், சிலர் மனம் எனும் நெருப்பில் புலன்களை அடக்கியும், சிலர் புலனுகர்ச்சிக்கான விஷயங்களை யாக நெருப்பிலிட்டும் யாகங்கள் செய்கின்றனர்.
தன்னுணர்வில் விருப்பம் கொண்ட சிலரோ புலன்களை அடக்கி, அதன் இயக்கங்களையும், பிராணனையும் அடங்கியிருக்கும் மனத்தீயில் யாகம் செய்கின்றனர். சிலர் பொருளாலும், சிலர் விரதம் போன்றவற்றாலும் யாகம் புரிகின்றனர். இன்னும் சிலர் அஷ்டாங்க யோகப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் அறிவை இலக்காய்க் கொண்டு வேதம் பயில்கின்றனர்.
லயிப்பிற்காக சிலர் சுவாசக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். உள்சுவாசத்தில் வெளிசுவாச இயக்கத்தையும், வெளிசுவாசத்தில் உள்சுவாச இயக்கத்தையும் நிறுத்தப் பயின்று அதில் லயிக்கின்றனர். இவர்களில் சிலர் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெளிசுவாசத்தை அதிலேயே யாகமாக அர்ப்பணிக்கின்றனர்.
யாகத்தின் போக்கினை அறிந்த இவர்கள் அனைவரும் ஜடக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, யாக விளைவு எனும் அமிர்தத்தைச் சுவைப்பதால் நித்திய உலகை அடைகிறார்கள்.
குருவம்சத்தவனே, யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது. அப்படி இருக்கையில் மறுவுலகைப் பற்றி என்ன சொல்வது? இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. கர்மங்களிலிருந்து தோன்றியவை. இதையறிந்து விடுதலையடைவாயாக.
பரந்தபா, பொருட்களினாலான யாகத்தை விட, ஞான யக்ஞம் சிறந்தது. ஏனெனில் எல்லா கர்ம யக்ஞங்களும் ஞானத்தில் தான் முற்றுப்பெறுகின்றன.
ஆன்மீக குருவுக்குப் பணிந்தும், பணிவிடைகள் புரிந்தும் கேள்விகள் கேள். உண்மையை உணர்ந்த அவர், உனக்கு உண்மை ஞானத்தை உணர்த்துவார்.
அதன்பின் மயக்கம் நீங்கி, எல்லா உயிரினங்களும் என் அங்கமே, அவை என்னுடையவை, என்னில் இருப்பவை என்றறிவாய்.
பெரும் பாபியாக நீ கருதப்பட்டாலும் ஞானப் படகினால், துன்பக்கடலைத் தாண்டுவாய்.
தீச்சுடரானது விறகுகளை சாம்பலாக்குவது போல், ஞானமானது கர்ம பந்தங்களை எரிக்கின்றது. ஞானம் போல் சிறந்ததும், தூயதுமில்லை. அதுவே யோக கனியாகும். இதைப்பெற்றவன் காலப்போக்கில் தன்னுணர்வில் திளைக்கின்றான்.
சிரத்தையுள்ளவன், புலனடக்கத்தாலும், ஞானத்தாலும், பரத்தில் ஆழ்ந்து, ஆன்மீக அமைதியை அடைகிறான். வேதங்களில் நம்பிக்கை இல்லாதவன் நாசமாகிறான், அவனுக்கு இவ்வுலகிலும், எவ்வுலகிலும் இன்பமில்லை.
செயலின் பலனில் இச்சையின்றி இறையருளால் சந்தேகங்கள் போக்கப்பட்டு, தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.
எனவே அர்ஜூனா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, யோக கவசம் அணிந்து எழுந்து போரிடு.