கடுகு

மே 3, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 3 - கர்ம யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 6:00 மு.பகல்
அர்ஜூனன் : ஜனார்த்தனா, கேசவா, பலனை விரும்பும் செயலை விட (கர்மம்), நிலையான அறிவு (ஞானம்) சிறந்ததாயின், கோரமான கொலைத் தொழில் புரிய என்னை ஏன் பலவந்தப்படுத்துகிறீர்? இருவழிகளை ஒன்றுபோல கூறும் உமது பேச்சுக்களால் எனக்கு மயக்கம் ஏற்படுகிறது. எது நன்மையானதோ அதை முடிவாகக் கூறும்.
களங்கமற்றவனே, இறை உணர்வைப் பெற விரும்புவோர் இருவிதமாக உள்ளனர். சிலர் மனக்கற்பனை ஓட்டத்தினாலும், சிலர் இறைவனை இறுதி இலக்காகக்கொண்டு கடமையாற்றியும் அவரை அறிய முயலுகின்றனர். ஆனால் விளைவுகளுக்கு அஞ்சி, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் அதிலிருந்து தப்புவதால் மட்டும், விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அதேசமயம் துறவினால் மட்டும் பக்குவம் அடைய முடியாது. ஏனெனில் இயல்பான குணங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர். ஒருகணம் கூட செயல்படாமல் இருப்பது எவருக்கும் இயலாது.

புலன்களை அடக்கி, ஆனால் மனதால் புலன் விஷயங்களை எண்ணிக்கொண்டு இருப்பவன் போலியாவான்.

புலன்களை மனதால் அடக்கி, இறை உணர்வுடன் அவரையடையும்படி, கடமையில் ஈடுபட்டிருப்பவன் நல்லவன் ஆவான்.

செயலற்ற நிலையைவிட, பக்தியுடன் செயல்படுவதே சிறந்தது. ஏனெனில் செயலின்றி உடலைக்கூட பராமரிக்க முடியாது.

ய்க்ஞபதியான விஷ்ணுவுக்கு சமர்ப்பணமாக ஒருவன் செயல்பட வேண்டும். இல்லையேல் அவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றன. பகவானது திருப்திக்காக வினையாற்றினால் அவன் விடுபடுவதுடன் பற்றடங்கி வாழலாம்.

படைப்பின் துவக்கத்தில் குலங்கள், தேவர்கள், யாகங்களை ஏற்படுத்தி “யாகங்கள் செய்து பலனடைந்து சுகமாயிருங்கள், யாகங்களால் தேவர்கள் மகிழ்ந்து உங்களை மகிழ்விப்பார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் பேணி நலம் பெறுங்கள்” என இறைவன் கூறினார்.

யாகத்தால் திருப்தி அடையும் அதிகாரிகளான தேவர்கள், மனிதர்களுக்கான வாழ்வுத் தேவைகளை எல்லாம் வழங்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு பதிலுக்கு படைக்காமல் அனுபவிப்பவன் திருடனாவான்.

யாகத்தில் முதலில் படைக்கப்பட்டதை உண்பதால் பக்தர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் தனது புலன் இன்பத்திற்காக உணவு தயாரிப்பவர்களோ பாபத்தையே உண்கின்றார்கள்.

விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வது யாகமாகும். யாகத்தால் மழையும், மழையினால் தானியமும், தானியத்தால் ஜீவர்களும் வாழ்கின்றனர். ஒருவருக்கான கடமைகள் இறைவனிடமிருந்து தோன்றிய வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. யாகங்களில் இறைவன் உறைகிறார்.

இத்தகைய யாகச்சக்கரத்தினை கடைப்பிடிக்காதவன் பாபி ஆவான். புலனின்பமே கதியாய் இருக்கும் அவனது வாழ்வு வீணாகும்.

தனக்குள் மகிழ்ந்து – திருப்தி கொண்டு பக்குவமாய் இருப்பவனுக்கு கடமைகள் ஏதுமில்லை. தன்னை உணர்ந்தவனுக்கு எந்தக் கடமையுமில்லை. செயலினால் அடைய வேண்டிய நோக்கமும் அவனுக்கில்லை. இறைவனைத் தவிர எவரையும் அவன் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

ஆதலால் பலனில் பற்றின்றி, கடமைக்காக செயல்படுவாயாக. இதனால் மேன்மை அடையலாம். ஜனகர் போன்ற மன்னர்கள் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தே பக்குவமடைந்தனர். எனவே உலகுக்கு நல்வழி காட்டவாவது செயல்படுவாயாக.

வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதையே மக்கள் பின்பற்றுகின்றனர். அவர்களின் செயல்களையே உலகம் உதாரணமாகக் கொள்கிறது.

பார்த்தனே, மூவுலகிலும் எனக்கென்று கடமைகள் ஏதும் கிடையாது. அடைய வேண்டியதும் ஏதுமில்லை. இருப்பினும் நான் செயல்படுகிறேன். ஏனெனில் நான் செயல்படாவிடில் மனிதரெல்லாம் என்னையே பின்பற்றி செயல்படாமல் இருந்து விடுவார்கள். நான் செயல்படுவதை நிறுத்தினால் உலகம் அழியும். தேவையற்ற இதற்கு நானே காரணமாகி ஜீவர்களின் அமைதியைக் கெடுத்தவனாவேன்.

பலனில் பற்றுடன் பாமரர்கள் செயல்படுவது போல், நல்ல புத்தியுள்ளவன் மக்களை வழி நடத்தும் பாங்கில் பற்றின்றி கடமையாற்ற வேண்டும். பாமரர்களுக்கு அவன் புத்திக் குழப்பத்தை ஏற்படுத்தாமலும், செயலிலிருந்து விடுபடத் தூண்டாமலும், பக்தியுடன் செயலாற்றத் தூண்ட வேண்டும்.

குணங்களால் மயங்கிய நிலையில் ஒருவன், இயற்கையால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே காரணமாகக் கருதுகிறான்.

பூரண உண்மையை அறிந்தவர்கள் தன்னை புலன்களிலோ, புலனுகர்ச்சியிலோ ஈடுபடுத்திக் கொள்வதில்லை. பக்தியுடன் செயல்படல், பலன் விரும்பிச் செயல்படல் இவ்விரண்டின் வித்தியாசத்தை அறிந்துள்ளனர். குணங்களால் மங்கியிருக்கும் அறியாதவர்களே, செயல்களில் தீவிர பற்றுக் கொள்வர். அது கீழ்த்தரமாயினும் அறிவுடையவர்கள் அவர்களைக் கலங்கடிக்கக் கூடாது.

எனவே எனக்கு அர்ப்பணமாக – என்னில் மனதை நிறுத்தி, பலன் கருதாமல், பொய் அஹங்காரத்தையும், ஊக்கமின்மையையும் கைவிட்டு போரிடுவாயாக.

இவ்வறிவுரையை பொறாமையின்றி நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுபவன் எல்லா விளைவுகளில் இருந்தும் விடுபடுகிறான். ஆனால் பொறாமையுடன் இதனை ஏற்காமல் இகழ்ந்து, பின்பற்றாதிருப்பவன் வீணன் ஆகிறான்.

அறிவிற் சிறந்த ஞானியும் கூட தன் இயல்புப்படியே நடக்கிறான். இயல்பினைத் தடுப்பதால் ஆவதென்ன?

இந்திரியங்களுக்கு விருப்பு, வெறுப்பு இருந்தாலும் அவைகளுக்கு வசப்படாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை தன்னுணர்வுப் பாதையில் தடுப்பாக அமைகின்றன.

பர தர்மங்களைச் சிறப்பாய் செய்வதைவிட குறையாயினும் சுயதர்மத்தை செய்வது நல்லது. பிற தர்மம் பயம் தரும். சுயதர்மமோ புரிகையில் அழிவுற்றாலும் நல்லது தான்.

அர்ஜூனன்: விருஷ்ணியே, விருப்பமே இல்லாவிட்டாலும் பாபச் செயல்கள் புரிய ஒருவன் தூண்டப்படுவது எதனால்?

பகவான்: அர்ஜூனா, ரஜோ குணத்தில் உண்டாகி, கோபமாய் உருவெடுக்கும் காமமே பாபமிக்க விரோதியாகும். அது எல்லாவற்றையும் அழிக்கும்.

நெருப்பு புகையாலும், கண்ணாடி தூசியாலும், கரு கருப்பையாலும் மூடப்பட்டிருப்பதைப் போல் ஜீவன் பலதரப்பட்ட காம உணர்வுகளால் மறைக்கப்பட்டிருக்கிறான். ஒருவனது தூய உணர்வானது, என்றுமே திருப்தி அடையாத நெருப்பு போன்ற, நித்திய விரோதியான காமத்தால் சூழப்பட்டுள்ளது.

புலன்கள், மனம், புத்தி இவைகளே ஜீவனின் அறிவை மறைத்து மயக்கும் காமத்தின் இருப்பிடங்கள் ஆகும்.

புலன்களை நெறிப்படுத்தி, அறிவு – அனுபவத்தை அழிக்கும் பாபச்சின்னமான காமத்தினை ஆரம்பத்திலேயே அடக்கி ஒழி.

ஏனெனில் புலன்கள் உடலை விட உயர்ந்தது. மனமோ புலன்களை விட உயர்ந்தது. புத்தி மனத்தை விட உயர்ந்தது. ஆன்மாவோ புத்தியை விட உயர்ந்தது. இவ்வாறாக ஆன்மாவை அறிந்து, அதன் உயர்ந்த இயல்புகளால் காம வடிவான கீழ் இயல்புகளை வெல்வாயாக.

கடுகு.காம்…….. www.kadugu.com

3 மறுமொழிகள் »

  1. ஐயா!
    கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று சொல்கிறீர்கள், இப்பொழுது ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான் .
    ந்ன்றி!

    Comment by ilavarasi — செப்டம்பர் 11, 2008 @ 3:30 பிற்பகல் | பதில்

  2. நன்றி இளவரசி

    Comment by கடுகு — செப்டம்பர் 13, 2008 @ 12:27 பிற்பகல் | பதில்

  3. நண்பர் இளவரசி அவர்களே!

    இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை அனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன். தங்களுக்கான பதில் இவ்விடுகையில். http://www.tamilscience.co.cc/2009/01/blog-post_19.html

    வாழ்த்துக்கள்!!!

    Comment by veerantamil — ஜனவரி 19, 2009 @ 9:56 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.