கடுகு

மே 1, 2008

பகவத் கீதை - அத்தியாயம் 1 - அர்ஜூன விஷாத யோகம்

கோப்பு வகை: ஸ்ரீமத் பகவத் கீதை — கடுகு @ 1:00 பிற்பகல்
திருதராஷ்டிரர் அமைச்சர் சஞ்சயனிடம் கூறினார் : சஞ்சயா, அறத்துக்குப் பெயர் பெற்ற குரு நிலத்தில் போர் புரியத் திரண்டிருந்த என் மக்களும் பாண்டு புத்திரர்களும் என்ன செய்கிறார்கள்?
சஞ்சயன் : பாண்டுவின் சேனையைப் பார்த்தவாறு, துரியோதனன் தன் ஆசாரியரிடம் கூறுகிறான்.

குருவே, உங்கள் சீடன் துருபத குமாரனால் நன்றாக அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவ சேனையைப் பாருங்கள்.

பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் சமமான வீரர்கள் அங்கு பலர் உள்ளனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மஹாரதர்களும் உள்ளனர்.

த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற பலவான்களும், யுதாமன்யும், உத்தமவ்ஜன் மற்றும் திரவுபதி, சுபத்ரையின் புதல்வர்கள் உள்ளனர்.

சிறந்தவரே, இனி நமது சேனைத் தலைவர்களை உமக்குத் தெரியப்படுத்துகிறேன். எப்போதும் வெற்றி வீரரான நீர், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிசிரவஸ் மற்றும் எனக்காக பிராண தியாகம் செய்யக்கூடிய – வல்லமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். பீஷ்மர் தலைமை ஏற்றுள்ள நமது படைபலம் அளவிட இயலாதது. ஆனால் பீமனின் படையோ சிறியது.

முக்கியமான போர் முனைகளிலிருந்து நீங்கள் முதியவரான பீஷ்மருக்கு பாதுகாப்பு கொடுங்கள்.

பின்னர் குருவம்சத்து வீரரான பிதாமஹர் பீஷ்மர் தமது சங்கை, சிம்ம கர்ஜனை போல் முழங்கி துரியோதனனை மகிழ்வித்தார். தொடர்ந்து சங்குகள், குழல்கள், பறைகள், முரசுகள், கொம்புகள் ஒரே சமயத்தில் முழங்கின.

மறுபுறத்தில், வெண்குதிரைகள் கொண்ட தேரில் இருந்தபடி பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜூனனும் தமது தெய்வீகமான சங்குகளை முழங்கினர்.

கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் சங்கையும், அர்ஜூனன் தேவதத்தம் எனும் சங்கையும், சாகச வீரனான பீமன் பெளண்ட்ரம் எனும் சங்கையும் முழங்கினர். யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் ஸூகோஷம், புஷ்பகம் எனும் சங்குகளையும் மற்றும் காசிராஜன், சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், ஸாத்யகி, துருபதன், திரவுபதியின் புதல்வர்கள், சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு போன்றோரும் தமது சங்குகளை முழங்கினர்.

சங்கொலிகளால் பூமியும் வானமும் நடுங்கின. திருதராஷ்டிரனின் மகன்களது இதயங்கள் நொறுங்கினது போலாயின.

திருதராஷ்டிர மன்னனிடம் அமைச்சர் சஞ்சயன் கூறினான். : மன்னா, ஹனுமன் கொடி பறக்கின்ற ரதத்தில் இருந்த அர்ஜூனன் உமது படைகளை நோக்கி வில்லேந்தியபடி கிருஷ்ணரிடம் கூறினான்.

அச்யுதா, எவருடன் நான் போரிட வேண்டும் என்பதைக் காண்பதற்கேதுவாக என்னை படையிடையே ரதத்துடன் நிறுத்துவீராக. துர்மதியனான துரியோதனனை மகிழ்விக்கும்பாங்கில் போருக்கு வந்திருப்போரை நான் காண வேண்டும்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் தமது சிறந்த ரதத்தினை சேனைகளின் நடுவே நிறுத்தினார். பீஷ்மர், துரோணர் மற்றும் சேனைத் தலைவர்கள் முன்னிலையில் “பார்த்தா, கூடியிருக்கும் குருவம்சத்தினரைப் பார்” என்று கூறினார்.

சேனைகள் நடுவே நின்ற அர்ஜூனன், எதிரணியில் தாய் – தந்தை, பாட்டனார், குருமார், சகோதரர், புத்திரர், பேரன்மார் வழியிலான உறவினர்களையும், தோழர்களையும் கண்டு அதிர்ந்தான். பின்னர் இரக்கத்துடன் கூறினான்.

அன்பிற்குரிய கிருஷ்ணா, போரிடும் எண்ணத்துடன் இங்கு கூடியிருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு என் உடல் நடுங்குகிறது. வாய் உலர்கிறது. ரோமம் சிலிர்க்கிறது, சருமம் எரிகின்றது, காண்டீபம் நழுவுகின்றது. இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. குழப்பத்தால் என்னை மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுனங்களைக் காண்கின்றேன்.

கோவிந்தா, உறவினரை அழிப்பதால் எனக்கென்ன லாபம்? அப்படியொரு வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

அரசும், சுகவாழ்வு அடைவதற்கும், யாருக்காக வாழவும் விரும்புவோமோ அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு சுகமாயிருக்க முடியுமா? மூவுலகும் கிடைத்தாலும் நான் இவர்களை இழக்க மாட்டேன். நான் கொல்லப்பட்டாலும் இவர்களைக் கொல்ல மாட்டேன். அல்ப பூமியைப் பெற நான் இதைச் செய்வேனா?

ஜனார்த்தனா, இந்த ஆக்கிரமிப்பாளர்களைக் கொல்வதால் நமக்கு பாபம்தான் வரும். திருமகள் கணவா, உறவுகளை அழித்துவிட்டு எப்படி மகிழ்வாய் இருக்க முடியும்?

பேராசையினால் கலகம், குலநாசம் இவைகளைச் செய்வதில் இவர்கள் பாபத்தைக் காணாவிடிலும் நாம் ஏன் பாபச்செயல்களில் ஈடுபடவேண்டும்?

குலம் அழிவதால் குலதர்மம் கெடும். இதனால் மீந்திருப்பவர்களும் அறமற்ற செயல்களைச் செய்வார்கள். குலத்தை அதர்மம் சூழ்ந்தால் குலப்பெண்கள் கெட்டுப்போய் தேவையற்ற சந்ததிகள் (வர்ண ஸங்கிரஹம்) உருவாகும். இவர்களுக்கு நரகமே கிட்டும். இத்தகைய குலங்களில், இறந்து போன முன்னோருக்கான பிண்ட காரியங்கள் சரிவர நடப்பதில்லை.

இதனால் நிலையான ஜாதி தர்மங்களும், குலதர்மங்களும் நிலை தடுமாறுகின்றன.

குலதர்மம் கெட்ட மனிதர்களுக்கு நரகமே கிடைக்கும் என நான் கேள்விப்பட்டுள்ளேன். ஐயகோ! அரசபோக ஆவலால் பாபம் புரிவதா?

திருதராஷ்டிர மக்களுடன் நான் போர் புரிவதைவிட, எதிர்ப்பின்றி அவர்களால் கொல்லப்படுவதையே சிறந்ததாக நினைக்கிறேன்.

சஞ்சயன் : இவ்வாறு கூறிய அர்ஜூனன், வில்-அம்பினை கீழே நழுவவிட்டபடி, தொங்கிய முகத்துடன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

கடுகு.காம்…….. www.kadugu.com

2 மறுமொழிகள் »

  1. very good

    Comment by subra — மார்ச் 27, 2009 @ 8:21 பிற்பகல் | பதில்

  2. This world is machine world and money minded people living here. Today problem only exists whereever God should exist.

    We people are running behind money and not bothered about humanity(human mankind). What is the difference between animals and human ?

    Because of this idiot,stupid,nonsense money we are not able to enjoy God’s gift to us. No one is happy, either rich or the poor.
    When people come out of those diversities(religion, caste,etc.,)sure we will have a enjoyable world. Then only God will save us, otherwise even God cannot.

    Comment by LEELAVATHY — ஜூலை 21, 2009 @ 10:44 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.