பள்ளியில் படிக்கும் போது ஒரு பழக்கம். ‘ஒண்ணுக்கு’ போகும் போது சும்மா இருப்பதில்லை. கக்கூஸில் போய் பையன்கள் வரிசையாக நின்று கொள்வோம். சுவரைப் பார்த்தவாறு நின்று கொண்டு சுவரில் யார் ரொம்ப உயரம் ‘தூக்கி’ அடிக்கிறார்கள் என்பது தான் போட்டியாக இருக்கும். அந்த கருமம் பிடித்த போட்டியில் ஜெயிக்க நிறைய தண்ணீர் குடிப்பது, ரொம்ப நேரம் அடக்கிக் கொண்டு இருப்பது போன்ற உபாயங்கள் கையாளப்படும்.
ஒரு தடவை மாலை பள்ளி முடிந்ததும் இப்படி ‘ஒண்ணுக்கு ஒலிம்பிக்‘ நடந்து கொண்டிருந்தது. அன்று பார்த்து, நானும் இன்னொரு பையனும் ஒரே நேரத்தில் கின்னஸ் சாதனை புரிந்து விட்டோம். அதாவது சுமார் ஏழடிக்கு மேலிருக்கும் அந்த சுவரைத் தாண்டி அருவி தரையிறங்கி விட்டது. சரியாக சொன்னால் தலையிறங்கி விட்டது. ஆமாம், அங்கே நின்று புகை பிடித்துக் கொண்டிருந்த ஒரு வாத்தியாரின் தலை மேலே அருவி இறங்கி விட்டது.
‘லேய் யாருலே அது…’ என்று வாத்தியாரின் ஆத்திரக்குரல் கேட்டது. அவமானம் தாங்காமல் கோபத்துடன் வைது கொண்டே அவர் விரைந்து வரும் சத்தமும் கேட்டது. அவரிடம் சிக்கினால் அதோகதி தான். அவர் வாசலுக்கு வரும் முன்னரே, மின்னல் வேகத்தில் வெளிவந்து வேலியைத் தாண்டி ஓட்டுப்பள்ளிக்கூடம் என்ற பாழடைந்த கட்டடம் வழியாக ஓடித் தப்பி விட்டோம். அப்படி ஓடும் போது ஒருவனுக்கு கால்சராய் கழன்று (பொத்தான் போடாததால்) கால் தடுக்கி விழுந்து எழுந்ததைப் பார்க்க வேண்டுமே…
பாவம், அந்த வாத்தியார் அவர் அடித்தது ‘திருட்டு தம்’, பள்ளி வளாகத்தில் புகை பிடிக்க தடை. மேலும், இந்த மாதிரி சுடு தண்ணீர்க்குளியல் வெளியில் சொல்லிக் கொள்கிற விஷயமா என்ன? திருடனுக்கு தேள் கொட்டியது போல ஆகி விட்டது அவரது நிலை. சுமார் ஒரு வாரம் வரை சம்பவத்தன்று பள்ளியிலிருந்து யாரெல்லாம் தாமதமாக போனார்கள் என்று புலன் விசாரித்துக் கொண்டிருந்தார், நாங்கள் மாட்டுவோமா என்ன?
அசை தொடரும்…
பள்ளிக்கால நினைவுகளை எனக்கும் மீட்டுத்தந்து இருக்கிறீர்கள்.
இடுகை அசத்தலாக நன்றாக உள்ளது !
Comment by கோவி.கண்ணன் — ஏப்ரல் 29, 2008 @ 9:33 மு.பகல் |
நன்றி கோவி.கண்ணன்.
Comment by கடுகு.காம் — ஏப்ரல் 29, 2008 @ 9:54 மு.பகல் |