கடுகு

செப்டம்பர் 26, 2008

அசை -‍ 18 – புலிக்குகை (2)

குகை வாசலை நெருங்கி வவ்வால்களைப் பார்த்ததுமே ஒருவன் 'நா வீட்டுக்கு போறேன், எங்கம்மா தேடுவாங்க' என்று கழன்று கொண்டான். அவனைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி எங்கள் யார் வீடுகளிலும் போய் சொல்லக் கூடாது என்று முக்கா முக்கா மூணுவாட்டி 'சத்தியம்' வாங்கிய பின்னரே அவன் போக அனுமதித்தோம்.

கம்பு ஒன்றில் பழைய துணியைச் சுற்றி, நெருப்பு மூட்டி தீப்பந்தம் தயாரானவுடன் 'ஒண்ணுக்கு போயிட்டு வந்துர்றேன்' என்று போன ஒருவனை ஆளையே காணோம். மூன்றாமவனும் குகையின் அமைப்பைப் பார்த்து அரண்டு போயிருந்தான். என்னையும் போக வேண்டாம், வீட்டுக்கு போய் விடலாம் என்று வற்புறுத்திய அவன் எனது பிடிவாதம் கண்டு 'நா வரலே, ஆனா வெளியே நிக்கேன்' என்று பெரிய மனது பண்ணி ஆறுதல் அளித்தான்.

குகை வாயில் தான் அவ்வளவு (சுமார் ஐம்பது, அறுபதடி உயரம்) பெரியதே தவிர குகை என்பது ஒரு பெரிய பொந்து அவ்வளவுதான். ஆனால் நீளம் அதிகம் என்று நினைக்கிறேன்.

கையில் தீப்பந்தத்துடனும், மனதில் திகிலுடனும் உள்ளே நுழைந்தேன். வெகு குறுகலான குகை அது. கொஞ்சம் பெரிய உடலுடன் எவரும் தவழ்ந்து கூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு அது. நான் ஏற்கனவே நோஞ்சானாக இருந்தது வசதியாகவே இருந்தது. ஒரு ஏழெட்டு அல்லது பத்து அடி உள்ளே சென்றிருப்பேன், ஒண்ணுக்கு போனவன் வந்துவிட்டான். வெளியில் இருந்த மூன்றாமவனுடன் சேர்ந்து அவன் கத்த ஆரம்பித்து விட்டான். 'லேய் வந்துருலே, வேணாம்லே....' என்று ஆரம்பித்து ஒண்ணுக்கு போனவன் அழவே ஆரம்பித்து விட்டான். நான் திரும்ப‌ ச‌த்த‌மே கொடுக்க‌வில்லை.

குகையினுள் அதிக‌ப்ப‌டியான‌ ஈர‌ப்ப‌த‌ம், நீர் அங்க‌ங்கே சொட்டிய‌து. குகையின் பாறைச்சுவ‌ர்க‌ளில் காக்கைப் பொன் துக‌ள்க‌ள் மினுக்கின‌. உள்ளே நுழைந்த‌ அடுத்த‌ நொடியே விய‌ர்த்து ஊற்றி விட்ட‌து. குகை மிக‌க் குறுக‌லான‌தால், முன்னே நீட்டியிருந்த‌ தீப்ப‌ந்த‌ வெம்மை வேறு த‌கித்த‌து.

மூச்சு முட்டியது. குகைக்குள் இருந்து புலி ஒன்று எதிரில் உறுமியபடி வருவது போலவும் அதன் பின்னால் முனிவர் ஒருவரும் காட்டுமிராண்டி ஒருவனும் வருவது போலெல்லாம் தோன்றியது.

மேலும் பத்தடி கூட தவழ்ந்திருக்க மாட்டேன், தீப்பந்தம் அணைந்து விட்டது. இருட்டென்றால் இருட்டு அப்படி ஒரு இருட்டு. வெளியிலிருப்பவன் அழும் சத்தம் தீனமாகக் கேட்டது. திரும்பக் கூட இயலாத ஒரு இடுகலில் இருந்தேன். எப்படியோ இடித்து கை, கால் முட்டியை எல்லாம் சிராய்த்துக் கொண்டு ஒரு வழியாக வெளியே வந்தேன். அவ்வ‌ள‌வுதான்.

வெளியில் இருந்த இருவரும் என்னை கடவுளாகவே பார்த்தனர். ஆனால் பொறாமையால் என்னைப் பாராட்டாமல், 'இதெல்லாம் உங்கம்மாவுக்கு தெரிஞ்சா அம்புட்டுதாம்லே' என்று வயிற்றில் புளியைக் கரைத்தனர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை.

கொஞ்ச நாள் எனது வீர சாகசம் பற்றி அரசல் புரசலாக தற்பெருமை அடித்துக் கொண்டேன். இதற்கு பின்னர் 'ஒல்லிப்பாச்சான்' என்று என்னை ஏளனம் செய்த பெரிய பையன்கள் கூட என்னிடம் வம்பு செய்யவில்லை. கோடை விடுமுறை கழித்து பள்ளிக்கு போய் சக மாணவர்களிடம் நான் புலிக்குகைக்கு 'உள்ளே' போய் வந்ததை விலாவாரியாக (ஏகப்பட்ட ரீலுடன்) சொன்னபோது யாருமே நம்பவில்லை. தெருப்பையன்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு தெரிந்த பின்னர் தான் நம்பினர்.

(சில ஆண்டுகள் முன்பு புலிக்குகை பக்கத்தில் அகழ்வாய்வில் பழங்கால கட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தித்தாளில் பார்த்தேன்.)

அசை தொட‌ரும்.

செப்டம்பர் 24, 2008

க‌ஞ்ச‌ த‌ந்திரம்

ஒவ்வொருத்தர் குறிப்பிட்ட சில விஷயங்களில் கஞ்சர்களாக இருப்பதைப் பார்க்கலாம். புத்தகம் வாங்குவதில் கஞ்சத்தனம், துணிமணி வாங்குவதில் கஞ்சத்தனம் என்று பல கஞ்சத்தனங்கள் உண்டு. தனக்கென எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் செல‌வு செய்வ‌தும், கூட‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு சேர்த்து செல‌வு செய்ய யோசிப்ப‌தும் ந‌ம்ம‌வ‌ர்களில் பெரும்பாலானோர்க்கு ப‌ழ‌க்க‌ம்.

இதில் ரொம்ப சுவாரசியமானது சாப்பாட்டு நேரக் கஞ்சத்தனம் தான்.

நண்பனொருவனிடம் இது பற்றி விவாதித்த போது என்னென்ன கஞ்ச தந்திரங்கள் கையாளப்படுகின்றன என்று தெரிந்து, ஆச்சரியமாகி விட்டது. இது குறித்து என் ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் புல‌ம்பிய‌ புல‌ம்ப‌ல்கள்……..

நண்பர்களையோ, உறவினர்களையோ எங்காவது சந்தித்து, சேர்ந்து சாப்பிடப் போகும் போதுதான் இந்த கஞ்சத்தனம் தெரியும் என்கிறான் ந‌ண்ப‌ன்.

உணவு விடுதிக்கு சாப்பிடக் கூப்பிட்டால் போதும், இவர்களின் மனப்போர் ஆரம்பமாகிவிடும். அழைப்பைத் தவிர்க்க முடியாது சில சமயம், சாப்பிடப் போகவும் ஆசை அல்லது பசி, ஆனால், பைசா நாம் கொடுக்க நேரிடுமோ என்ற பயம்.

விடுதிக்கு போகும்போதே சிந்தனை படரும். 'போய் ஒரு காப்பி மட்டும் குடிச்சிடலாம், அவன் மட்டும் சாப்டுட்டு காசைக் கொடுத்துத் தொலையட்டும்' என்று மனதில் எண்ணம் ஓடும். எதிராளி நன்றாக வயிறு முட்ட சாப்பிடுவதை வேறு வழியின்றி பார்த்துக்கொண்டே, அரை சிரட்டை காப்பியை அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை ஊதி ஊதி உறிஞ்சுவார்கள். இல்லாவிட்டால், அடிக்கடி எச்சில் ஊறி விழுங்க வேண்டியிருக்குமே. கொஞ்சம் விவ‌ர‌மான‌வ‌ர்க‌ள், போன‌தும் காப்பி சொல்ல‌ மாட்டார்களாம், எதிராளி சாப்பிட்டு முடிப்ப‌த‌ற்கு ச‌ற்று முன்தான் காப்பி சொல்லுவார்களாம். முதலிலேயே காப்பி குடித்து முடித்து விட்டால், சும்மா அம‌ர்ந்திருக்கும் இவ‌ரிட‌ம் பில் நீட்ட‌ப்பட்டு விடும் என்ற பயமாம்.

பேருந்திலோ புகை வ‌ண்டியிலோ வ‌ரும்போது சாப்பாட்டுக்கு காசு யார் கொடுப்ப‌து என்ற‌ ப‌ய‌த்தில் அனைவ‌ரும் சாப்பிடாமல் ப‌ட்டினி கிட‌ப்ப‌தெல்லாம் ச‌க‌ஜ‌ம் என்று ப‌ல்லைக் க‌டிக்கிறான் ந‌ண்ப‌ன்.

ஒரு சிலர் 'டிபன் சாப்பிடலாமா?' என்று கேட்கும் போதே, 'அடடே நான் பர்ஸ் எடுத்துட்டு வரலேயே, கிரெடிட் கார்டு கூட அதிலேதான் இருக்கு' என்று அங்கேயே பில் பொறுப்பை நண்பன் தலையில் கட்டி விடுவார்களாம். 'இப்போதான் சாப்ட்டு வந்தேன்' என்று பொய் சொல்லிச் சமாளிப்பது சிலர் வழக்கம் போலிருக்கிறது. எதிரில் அமர்ந்து கொண்டு எதுவும் சாப்பிடாமலேயே பொழுதைப் போக்கி விடுவார்கள். என்ன‌ செய்ய‌, காசை மிச்ச‌ப்ப‌டுத்த‌ வேறு வ‌ழி?

பணத்தை வேறெங்காவது பத்திரப்படுத்தி விட்டு ஐம்பது ரூபாயை மட்டும் பர்ஸில் வைத்துக் கொள்வது ஒரு உத்தி. பணம் கொடுக்க பர்சைத்திறந்து விட்டு, 'ஓஹோ, காலைல பெட்ரோல் போட்டேன் இல்லே, அதான் அம்பது ரூபா மட்டும் இருக்கு' என்று தப்பித்துக் கொள்வது. ப‌ண‌த்தை ப‌த்திர‌ப்ப‌டுத்த‌ ம‌றந்திருந்தால், பாத்ரூம் எங்கிருக்கிற‌து என்று விசாரித்து அங்கு போய் ரகசியமாக காசை மாற்றி வைத்துக் கொண்டு வருபவர்களும் உண்டாம். இப்ப‌டி காசை மாற்ற‌ப் போய் ஒருவ‌ன் க‌க்கூசிலேயே ஒரு மாத‌ ச‌ம்ப‌ளத்தை ப‌ர்ஸோடு போட்டு விட்டு அவ‌திப்ப‌ட்ட‌ க‌தையெல்லாம் உண்டாம்.

சந்திக்க வரும்போதே, தொலைபேசியில் 'மாப்ளே அங்கதான் வர்றேன், பீர் வாங்கி வச்சிடு, சாப்பாடும் சிகரெட்டும் நா வாங்கிட்டு வந்துடறேன்' என்று இடக்கு பண்ணுவது ஒருத்தன் வழக்கமாம். எங்காவது காக்காய் பிரியாணிக் கடையில் பத்து அல்லது பதினைந்து ரூபாய்க்கு ஒரு குஸ்கா பொட்டலம், அதுதான் 'சாப்பாடு', கூட இரண்டு சிகரெட். 'லெக் பீஸ் இல்ல மாப்ள, அதான் குஸ்கா மட்டும் வாங்கிட்டு வந்தேன்' என்று சமாளிப்பானாம். ஆனால், திரும்பப் போகும்போது தனியாக தலப்பாகட்டில் முழுக்கட்டாக‌ பிரியாணி சாப்பிட்டு விட்டுப் போகும் எமகாதகன் இவன் என்கிறான் என் ந‌ண்ப‌ன்.

இன்னும் ஒரு சில‌ர் கிட்ட‌த்த‌ட்ட பிச்சை எடுப்ப‌து போன்றே, 'ஒன்னைய‌ப் பாக்க‌த்தான் வர்றேன், இன்னிக்கு வெஜ்ஜா நான்‍‍ வெஜ்ஜா, என்ன‌ வாங்கித் த‌ர்றே?' என்று செல்பேசியிலேயே காசுக்கு களங்கமில்லை என்று உறுதி செய்து கொண்டு அப்புற‌ம்தான் வ‌ருவார்க‌ளாம்.

இன்னொருத்தன், சாப்பிடும்போது வேண்டுமென்றே மிக மெதுவாகச் சாப்பிடுவானாம். பில் வரும்போது ஒரு கை சாப்பாட்டில் இருக்கும், மறு கையில் தண்ணீர் டம்ளர் இருக்கும். இவன் கையில் பில் கொடுக்க முடியாது, தட்டில் பில் வைத்தாலும் யாராவது பில்லை எடுத்து பொறுப்பேற்கும் வரை தண்ணீர் குடிப்பது, திரும்ப ஜக்கில் இருந்து தண்ணீர் ஊற்றித் திரும்பக் குடிப்பது இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பானாம்.

பில் வருவதற்கு ஓரிரு நிமிடம் முன்னால் செல்பேசியை எடுத்து யாருக்காவது பேச ஆரம்பிப்பது சர்வ சாதாரணமாக கையாளப்படும் யுக்தி. தொலைக்காட்சி இருந்தால் அதை ஆர்வ‌மாக‌ப் பார்ப்ப‌து போல‌ ந‌டிப்ப‌து ஒரு தந்திரம். கேர்ஃப்ரீ விளம்பரமாக இருந்தாலுமே 'இந்த விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று சிலாகிப்பார்கள் என்று க‌டுப்பாகிறான் என் ந‌ண்ப‌ன்.

சுவரோரமாக எதிரெதிரே இரண்டிரண்டு பேராக உட்காரும் நாற்காலி அமைப்பில், முதலில் போய் சுவரோரம் உள்ள நாற்காலியில் அமர்ந்து விடுவது ஒரு சிலரின் குயுக்தி. பில் கொடுக்கப்படும் போது இந்தப்பக்கம், அதாவது நடைப்பக்கம் உள்ளவரிடமே பில் தரப்படும்.

சிலருக்கோ, க‌ல்லாவில் காசு கொடுக்கும் ச‌ம‌ய‌த்தில்தான் இர‌ண்டு கால்ச‌ராய் பாக்கெட்கள், பின் பாக்கெட், மேல் பாக்கெட், உள்பாக்கெட் என்று ச‌க‌ல இடங்களிலும் (பர்ஸைத் தேடுவாராம்) கை மேயும் போல். ப‌ண‌த்தை எடுக்க‌ கொஞ்ச‌ம் தாம‌தித்தால் அடுத்த‌வ‌ன் கொடுத்து விடுவான் என்ற‌ ஒரு ந‌ப்பாசையாம்.

சரியாக பில் வரும் நேரத்தில் கைகழுவப் போவது, மேசைக்கு கீழே கைக்குட்டையைப் போட்டு விட்டு எடுப்பது போன்றவை எல்லாம் பழைய ஆனால் என்றும் கைவிடப்படாத தந்திரங்கள் என்று தெரிகிற‌தாம்.

எதற்கும் உதவாத கிரெடிட் கார்டு ஒன்றை வைத்திருப்பது சிலர் பழக்கமாம். தேய்க்கப்பட்டால், கண்டிப்பாக செல்லாது, டிக்ளைன் ஆகும். வேறெவன் தலையிலோ பில் விழும். 'பேங்குக்கு நாக்கப் பிடுங்கற மாதிரி மெயில் அனுப்பணும், நாளைக்கு ஞாபகப்படுத்து' என்று பில்லுக்கு பணம் கொடுத்தவனிடமே சைட் ரீல் ஓட்டுவார்க‌ளாம்.

பர்ஸில், ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு வருவது ஒரு உபாயம். பெரும்பாலும் 'சில்லறை இல்லை' என்ற பதில் இவர்களின் வயிற்றில் பால் வார்த்து விடுமாம்.

பணம் செலவழிக்காமல் ந‌ழுவிய‌வ‌ர்க‌ள் கல்லாவில் சில்லறைக்காசு தேவைப்பட்டால் மின்னல் வேகத்தில் சில்லறையை அள்ளிக் கொடுப்பது, பார்க்கிங் ஊழியருக்கு டிப்ஸ் தருவது போன்ற அல்ப வித்தைகள் எல்லாம் காட்டுவார்களாம்.

இது மாதிரியானவர்கள், வெளியில் வ‌ந்த‌தும், 'சிக‌ரெட் வாங்க‌றேன் / கூல் டிரிங்க்ஸ் குடிக்க‌லாம்' என்று த‌ங்க‌ள் கஞ்சத்தனத்தையோ / தவறையோ / குற்ற‌ உணர்ச்சியையோ ம‌றைக்க எத்தனிக்கும் போது 'என‌க்கு ஒரு பாக்கெட் சிக‌ரெட்டும் ஒரு லைட்டரும் வாங்கிடு, அப்டியே ஒரு லிட்டர் கூல்டிரிங் ஒரு வாட்டர் பாட்டில்' என்று அடுக்கி இது மாதிரி ஆட்களுக்கு அதிர்ச்சி வைத்திய‌ம் கொடுப்ப‌து என் நண்பனின் ப‌ழ‌க்க‌ம்.

செப்டம்பர் 22, 2008

அசை – 17 – புலிக்குகை (1)

கோவில்பட்டி ஊரின் மேல்புறம் கடைசி எல்லையில் பிரதான நெடுஞ்சாலையை விட்டு சற்றே ஒதுங்கி இருப்பது கதிரேசன் (கோவில்) மலை. அதொன்றும் பெரிய மலை இல்லை, பெரிய குன்று எனலாம். குன்றின் மேலே ஒரு முருகன் கோவில் உண்டு. ஒரே ஒரு தடவை அக்கோவிலுக்குள் சென்றிருக்கிறேன். பராமரிப்பின்றி பாழடைந்து போன அந்தக் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு சொர்ணமலை முருகன் கோவில் என்று வழங்கப்படுகிறது. கதிரேசன் மலை அடிவாரத்தில் தான் இலக்குமி ஆலை, ஆலைக் குடியிருப்பு பகுதி, பள்ளிகள் ஆகியவை மிகப்பெரிய வளாகமாக அமைந்துள்ளன.

இலக்குமி ஆலை மேல் நிலைப்பள்ளியின் ஒரு புற வகுப்புகளிலிருந்து பார்த்தால் மலை முழுதும் தெரியும். ஒரு அய்யர் பையன், மிதிவண்டியில் எப்படியோ மேலே போய் பூஜை செய்து விட்டு, பின் திரும்ப இறங்கும் போது முழு வேகத்தில் படிகளின் ஓரமாக இருக்கும் சரிவுகளில் மிதிவண்டியில் இறங்குவான். பார்க்க ஆச்சரியமாகவும் திகிலாகவும் இருக்கும்படியான வேகம்.

மலையடிவாரத்தில் புலிக்குகை என்றொரு குகை. தூரப்பார்வைக்கு சாதாரணமாக இருக்கும், பக்கத்தில் போனால் தான் அதன் பிரம்மாண்டம் தெரியும். குகையின் பின்புறம் வழியாக பாறை உச்சி வரை ஏறலாம். சில தடவை மேலேறிப் போய் மேலிருந்து வெடிகளை கொளுத்தி கீழே போட்டு விளையாடி இருக்கிறேன். ஊரில் பைய‌ன்க‌ள் வீடுக‌ளில் கோபித்துக் கொண்டு காணாம‌ல் போனால் முத‌லில் அங்கே போய்த்தான் தேடுவார்க‌ள். ம‌ரங்கள், ப‌சுமை என எதுவும் இல்லாத‌ பொட்ட‌ல் என்றாலும் அமைதியான‌, ஆள‌ர‌வ‌ம‌ற்ற‌ ர‌ம்மியமான‌ ஒரு சூழ‌ல் அங்கு நில‌வும். முன்பெல்லாம் பொங்க‌லுக்கு அடுத்த‌ க‌ரிநாள் அன்று மட்டும் ம‌லையில் ம‌க்க‌ள் கூட்ட‌ம் மொய்க்கும். இப்போது கோவில் புன‌ர‌மைக்க‌ப்ப‌ட்ட‌தால் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் அதிக‌ம் இருப்ப‌தாக‌க் கேள்விப்ப‌ட்டேன்.

குகை வாயிலை நெருங்கும் போது வவ்வால்களின் நடமாட்டமும், நாற்றமும் பயமுறுத்தும். அந்த குகை பற்றி பல கட்டுக்கதைகள் உண்டு.

அதில் ஒரு காட்டுமிராண்டி வசிப்பதாகவும், அவ்வப்போது ஊருக்குள் வந்து கண்ணில் பட்ட சிறுவர்களை குகைக்கு கடத்திச் சென்று கொன்று தின்பதாகவும் சின்ன வயதில் ரொம்ப பயமுறுத்துவார்கள்.

குகைக்குள்ளே முனிவர் ஒருவர் தவம் செய்வதாகவும், குகைக்குள் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கும் மலை மேலிருக்கும் முருகன் கோவிலுக்கும் சென்று பூசை செய்வதாகவும் நோக்கம் போல கதை கட்டுவார்கள் பையன்கள்.

‘புலி உள்ளே இருக்கிற‌து, அதை நான் பார்த்தேன்’ என்று அடிக்கடி வ‌த‌ந்தி கிள‌ம்பும். ஆனால் எடுப‌டாது.

ஒரு தடவை புளிய மரங்களை எல்லாம் நோய் தாக்கி, புளி சரியாக காய்க்காமல், புளிக்கு ப‌ஞ்ச‌ம் வ‌ந்து விட்ட‌தாம். இல‌ங்கையிலிருந்து க‌ப்ப‌லில் ம‌லை ம‌லையாக வந்த புளியை ஒரு வியாபாரி அங்கே ப‌துக்கி வைத்து விற்றானாம். அதிலிருந்து அத‌ற்கு பெய‌ர் ‘புளிக்குகை’ ஆகி காலப்போக்கில் ‘புலிக்குகை’ ஆகி விட்ட‌தாம். இப்ப‌டி ஒரு க‌தை உண்டு.

இன்னொருவன் கொஞ்சம் மேலேயே போய், தான் ஆண்டு விடுமுறையில் உள்ளே போனதாகவும் அங்கே சுனை முழுவதும் பனியால் நிரம்பி இருந்ததாகவும் அதில் விளையாடியதாகவும் கப்சா விட்டு என்னிடம் அடி வாங்கினான்.

குகை வழியாக செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு ஒரு சுரங்க நீர்ப்பாதை இருப்பதாக அசைக்க முடியாத ஒரு செய்தி இன்னும் கூட நிலவுகிறது. (இது மெய்யா என இதுவரை எனக்குத் தெரியவில்லை).

குகைக்குள் ஒரு ஊற்றுச்சுனை இருக்கிறதாம். அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை போட்டால் கொஞ்ச‌ நேரத்தில் அது செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மிதக்கும் என்று சொல்வார்கள். (குகைக்கும், செண்பகவல்லி அம்மன் கோவில் குளத்துக்கும் ஒரு மைல் தூரம் இருக்கும்) ‘அதெல்லாம் அரைமணி நேரத்தில் வராது, அமாவாசைக்கு தான் வரும், பெளர்ணமிக்கு தான் வரும்’ என்று வாதிடும் வீணாப்போன‌வ‌ன்க‌ளும் இருந்த‌ன‌ர்.

‘அதெல்லாம் சரி, நீ இதை பாத்திருக்கியாலே?’ என்று பையன்கள் யாரிடமாவது கேட்டால் அவ்வளவுதான், ‘எங்க வீட்டுலே, எலுமிச்சம்பழ சர்பத் போடும் போதெல்லாம் என் அண்ணன் குகைக்குள்ளே போய் எலுமிச்சம்பழத்தை போடுவான், நான் தெப்பக்குளத்துக்கு போய் பழத்தை எடுத்துட்டு வந்து அதிலே தான் சர்பத் போடுவாங்க எங்கம்மா, அப்போதான் டேஸ்டா இருக்கும்’ என்று சர்வ சாதாரணமாக வாய்க்கு வந்தபடி அண்டப்புளுகு புளுகுவார்கள்.

கட்டபொம்மன் வெள்ளையர்களிடமிருந்து தப்பி சிலகாலம் அங்கு பதுங்கி இருந்ததாகவும் ஒரு கதை உண்டு. இது மாதிரி கதை சொல்லும் போது வரலாறு கண்டபடி திரிக்கப்படும். ‘கட்டபொம்மனோட நிஜப்பேரு கெட்டபொம்மன், அவரு ரொம்ப கெட்டவரு….’ என்கிற ரீதியில் கதை நீளும்.

இதுமாதிரியாக‌ப்பட்ட கதைகள் புலிக்குகை மர்மம் பற்றிய ஆவலை பெருமளவு தூண்டி விட்டிருந்த‌ன. அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே செல்லுதல், கண்ட பையன்களுடன் சேர்ந்து விளையாடுதல் ஆகியவை என் வீட்டில் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தன. மலைப்பக்கம் நான் போகலாமா? என்று கேட்டாலே திட்டு நாறி விடும்.

ஒரு தடவை வீட்டில் யாரும் இல்லாத சமயம் வாய்த்தது. தெருப்பையன்கள் நான்கு பேர் திருட்டுத்தனமாக புலிக்குகைக்கு கிளம்பினோம். குகை இருட்டாக இருக்கும் என்பதால் தீப்பந்தம் தயாரிக்க‌ கொஞ்சம் பழைய துணி, தீப்பெட்டி ஆகியவைதான் எங்கள் ஆயுதங்கள்.

அசை தொடரும்….

செப்டம்பர் 19, 2008

ஊடகங்களின் சமூகப் பொறுப்புணர்வு….

நேற்று காலை (18-09-2008) தினமலர்.காம் தளத்தை திறந்தவுடம் முதலில் கண்ட செய்தி : "ஐசிஐசிஐ வங்கி திவாலானதாக வதந்தி, (தூத்துக்குடி அருகிலுள்ள) ஒரு ஊரில் வங்கிக் கிளைகள் மற்றும் தானியங்கி பணவழங்கிகள் முற்றுகை"

மதியம் தளத்தைப் பார்க்கும் போது அந்த செய்தி இல்லை. தேடிப்பார்த்தும் அதன் சுவடே இல்லை. அனேகமாக வங்கியிலிருந்து வேண்டுகோள் வந்திருக்கும், உடனடியாக வெளியிட்ட செய்தியைத் தூக்கி விட்டிருக்கின்றனர். அச்சம்பவம் உண்மை என்றே இணையத் தேடலில் தெரிந்தது. ஆக உண்மையான ஒரு சம்பவத்தை மூடி மறைக்க முயல்கின்றனர்.

இதற்குப் பின் சில மாதங்கள் முன்பு எழுதி பதிவேற்றப்படாத ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. கீழே..........

ஊடகங்கள் தங்களுக்கான த‌ர்ம‌ம் ப‌ற்றி பேசுகின்றன, தமது ஊடகத்தினர் தாக்க‌ப்ப‌டும் போது கூக்குர‌லிடுகின்ற‌ன. ஆனால், இவ‌ர்க‌ள் நெறிப்ப‌டி ந‌ட‌ந்து கொள்கின்ற‌னரா?....

அனைத்துமே வணிக நோக்கம் என்றாலும், கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வு இருத்தல் வேண்டாமா என்ன?

ஒரு பத்திரிகை ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுகிறது என்பதெல்லாம் முன்பு முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள். பல பத்திரிகைகளை கட்சிகளே நடத்துகின்றன. அல்லது ஏதாவது ஒரு கட்சிக்கு அல்லது ஆளுங்கட்சிக்கு ஒத்து ஊதும் வேலையைத்தான் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. இது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தாலும் இவற்றைத்தான் ர‌சித்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நமது அரசியல் தலைவர்கள் வீதிகளிலும் அறிக்கைகளிலும் வெட்டி முழக்கம் இடுவர். அந்த பிதற்றல்களை நமது பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு முதல்பக்க செய்தியாக வெளியிடும்.

(அரசியல்வாதிகள் தமிழுக்கு என்றுமே முதலிடம் தரப்போவதில்லை. எல்லாம் வெத்து வேட்டுப் பேச்சுக்கள்தான் என்பது சற்று தமிழக அரசியலை நோக்கினால் தெரியும். இவர்களால் தமிழ் வளராவிட்டாலும் பரவாயில்லை, சாகாமல் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டது. சென்னை பண்பலை வானொலியின் பெயர் : ரெயின்போ, அரசு மதுக்கடையின் பெயர் : டாஸ்மாக்)

அரசியல்வாதிகள் தமிழை எந்த விதத்திலும் வளர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட பெரும்பாலான பத்திரிகைகளுக்கு அருகதையில்லாமல் போய் விட்டது.

தினமலரில் சில பகுதிகளின் தலைப்புகள் : டீ கடை பெஞ்ச், கோர்ட், டவுட் தனபாலு, காலண்டர், ஷாப்பிங்.....

'நம்பர் ஒன் நம்பர் ஒன்' என்று கக்கூசைத் தேடுகிறது தினகரன்.

'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' என்கிறது இன்னொன்று, இது இவர்களின் மொழியிலேயே சொல்வதானால் 'வேஸ்ட் கண்ணா வேஸ்ட்'

விஷூவல் டேஸ்ட், டயலாக் என்று தான் தலைப்புகள் இருக்கும்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்று தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆரம்பமான ஊடக விளக்கங்கள், மக்களுக்கு பாதிப்படையாமல் தவறு செய்ய வழி உள்ளது என்று விளம்பரமிட்டு கலாச்சார சீர்கேட்டுக்குத்தான் வித்திட்டன.

நமுத்துப் போன 'பெண் உரிமை' பற்றி எழுதிக்களைத்து விட்ட ஊடகங்கள், பெண்களை துகிலுரித்து, உரித்த கோழி கடையில் தொங்குவது போல படமிட்டு விற்றுக் கொண்டிருக்கின்றன. எந்த‌ ந‌டிகையின் தொப்புள் இது என்று போட்டி வைத்து ம‌க்க‌ளின் கீழான‌ ர‌சனைக்குத் தீனி போட்டு கலைச்சேவை செய்கின்றன‌.

முன்பு இதழ்களில் நடுப்பக்கத்தில் மட்டும் கவர்ச்சியாக ஒரு படம் வரும். சில வீடுகளில் வீட்டுத்தலைவர் நடுப்பக்கத்தை கிழித்து எறிந்து விட்டே புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டு வருவார். மக்கள் கட்டுப்பாட்டுடனே இருந்தனர். தமது எல்லையை அறியாத ஊடகங்களே அந்த கட்டுப்பாட்டைத் தகர்த்து மக்கள் மனதில் நஞ்சை வித்திட்டு பயிரிட்டு விட்டன்ர். வித்திடப்பட்டவைகளின் அறுவடைகள் தான் இன்றைய எய்ட்ஸ் பாதிப்பு, பணமே பிரதானம் என்ற எண்ணங்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், மணமுறிவுகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவை.

திரைத்துறைக்கு தமிழகத்தை அடிமையாக்கியதில் பெரும்பங்கு தொலைக்காட்சிகளுக்கே. திரைப்ப‌ட‌ங்களை மைய‌மாக‌க் கொண்டே தொண்ணூறு ச‌த‌விகித‌ தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ள் அமைக்கப்படுகின்ற‌ன‌.

அந்தரங்கம், புனிதம் என்ற பெயர்களில் பாலியல் செய்திகளை இலைமறை காய்மறையாகக் கொண்டு வந்து எப்படி உடலுறவு கொள்வது என்று பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதித்து முடித்து விட்டனர். இப்போது 'எனக்கும் என் ஒன்று விட்ட தம்பிக்கும் இடையே தொடுப்பு உள்ளது, இதை எப்படி நிறுத்துவது?' என்று ஆலோசனை கேட்பது போன்ற கடிதங்களும் அவற்றுக்கு பதில்களும் மலிந்து விட்டன.

ம‌க்க‌ளின் வ‌க்கிர‌மான‌ உண‌ர்வுக‌ளையும், கீழ்த்த‌ர‌மான‌ ஆசைக‌ளையும் தூண்டி விட்டு அந்த‌ நெருப்பில் பணமீட்டி குளிர்காயவே இது மாதிரியான நிகழ்ச்சிகளும் வெளியீடுகளும்.

சீர்கேடுகள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருக்கின்றன. கள்ளத் தொடர்புகளும் முறை தவறிய உறவுகளும் ஆதியிலிருந்தே இருக்கின்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவுகள் ஆபத்தானவை. ஆந்திராவில் சில மாதங்கள் முன் இரு ஆண்களுக்கு அவர்களின் பெற்றோரே திருமணம் செய்து வைத்திருக்கின்றனர், காரணம் - ஓரினச்சேர்க்கை.

எல்லாம் செய்து குட்டிச்சுவராக்கி விட்டு, நாட்டு நடப்பு கேவலமாகி விட்டது, மக்களுக்கு இதெல்லாம் இருந்தால் தான் பிடிக்கிறது, நாங்கள் ஜனரஞ்சக பத்திரிகை, டிஆர்பி ரேட்டிங் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கதை சொல்வார்கள்.

செப்டம்பர் 18, 2008

உங்களுக்கும் மரணம் வரும்………..

நம்பவே முடியவில்லை, இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் மேலிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த எனது நெருங்கிய நண்பர் முதல் மாரடைப்பிலேயே காலமாகி விட்டார். மரணம் சற்று சர்ச்சைக்குரியதாகி விடவே போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னரே உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரது அடுக்கக வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் கார் பார்க்கிங்கில் பார்வைக்காக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பழகுவதற்கு மிக இனிமையானவர், நாணயமானவர், கெளரவமானவர், காவல் அதிகாரி போன்ற கம்பீரத் தோற்றமுடையவர், விதிகளை மீறாதவர் எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் அவர். நேற்று வரை அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எத்தனை, சுற்றி வந்த நண்பர்கள் எத்தனை பேர், அட்டவணை போட்டு சுற்றி வரும்படியான நண்பர்கள். இன்று அவருக்காக அழுது கொண்டிருப்ப‌வர் அவரது மனைவி மட்டுமே. அவர் அழுவது கண்டு கண்கலங்கி சிலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர், அவ்வளவுதான். ஆம்புலன்சுக்கு அருகில் போக மனமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை, சொல்லி வைத்தது போல் எல்லோரும் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தனர். அவரது பத்து வயது மகன் திகிலடித்துப் போய் அங்குமிங்கும் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்தான். அவனை அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் எத்தனிக்கவில்லை.

பாவம், அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடக் கூட ஆளில்லை. அந்த அளவு அலட்சியம். இறந்தவருக்கு என்ன வாங்கிப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற பகுத்தறிவுத்தனமாகக் கூட இருக்கலாம். மாலை கூட இல்லாததைக் கண்டு வெறுத்துப் போய் நண்பருடன் பைக்கில் சென்று மாலை வாங்கி வந்தேன். பைக்கில் என் பின்னால் அமர்ந்து மாலையைச் சுமந்து வந்த நண்பருக்கு மாலை சாத்த உடன் வர தயக்கம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது வரவில்லை என்று நூறடி தள்ளியே நின்று விட்டார். மாலையை ஆம்புலன்சில் படியேறிப் போட எனக்கு உதவி செய்ய எவருமில்லை. நான் திணறுவது கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரைமனதுடன் பீடியை வீசிவிட்டு வந்து உதவினார்.

அலுவலக நண்பர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் வந்த‌ உடன் பைல் செய்ய வேண்டும் போன்ற அலுவலக ரீதியான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன‌. மலர் வளையம் வைத்த பின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பயப் பார்வை, அத்துடன் கழன்று கொண்டனர். வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி, வந்தாக வேண்டுமே என்று வந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

கடைந்தெடுத்த அயோக்கியன் இறந்தால் கூட சொல்லப்படுகிற “பாவம் நல்ல மனுஷன் போயிட்டாரு” போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளைக் கூட அங்கே கேட்க முடியவில்லை. “இம்பெர்சனல் அஃபிஷியல் ஒர்க்” மாதிரி ஒரு வேலைக்கு வந்தது போன்ற இறுக்கமான எந்திர முகபாவனைகள், அவற்றில் மெய்யான‌ வருத்தம் புலப்பட‌வில்லை.

தேவையற்ற ஒரு இறுக்கம், அது துக்கத்தின் பொருட்டு விளைந்ததல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. தவறிக்கூட சிரித்து விடக்கூடாது, அதிரப் பேசக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த முகங்களில் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட கவலை தொக்கி நிற்கிறது. சில அக்கம்பக்கவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் பரிதாபப் பார்வைகள் மட்டுமே சொல்லத்தக்கவை.

போஸ்ட் மார்ட்டம் செய்ததால் வீட்டுக்குள் கொண்டு செல்லாமல் உடனடியாக‌ பக்கத்திலிருக்கும் மயானத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று முதலில் உறவினர் ஒருவர் தெரிவித்தார். பின்னர், ஊருக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி வந்த‌தும் கூட்டம் கலைய ஆரம்பிக்கின்ற‌து.

“அதான் ஊருக்கு கொண்டு போறாங்களாமில்லே, நாம இருந்து என்ன பண்ண” என்ற முணு முணுப்புகள் கேட்கின்றன‌. இறந்தவருக்கு மாலை கூட இடாதவர்கள், கடைசி வரை இருந்து என்ன செய்ய‌ முடியும் என்று தெரியவில்லை.

“நல்ல வேளையா ஊருக்கு கொண்டு போறாங்க, இல்லேன்னா மயானம் வரைக்கும் கூடப் போயாகணும்” என்ற நிம்மதி பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிற‌து.

“பரவாயில்லை, மயானம் வரை போற சிரமம் மிச்சம், அதனால ஆம்புலன்ஸ் கிளம்பற வரை இருக்கலாம்” என்று சிலர் பெரியமனதுடன் முடிவு செய்துவிட்டிருந்தனர்.

“அடேங்கப்பா ஊரு வரைக்கும் போயிட்டு வரணுமா?” என்று கறுப்பு கால்சராயில் துக்கம் அனுஷ்டிக்கும் சில நாகரீக கனவான்களின் முகங்கள் கறுக்கின்றன……..

நகரத்தனத்தின் சுழலில் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நோய் தொற்றிக் கொள்ளுமா? மறைந்தவர் பாய்ந்து வரப்போகிறாரா, பேய் பிசாசு பயமா? என்ன பயம் உங்களுக்கு?

நீங்கள் மேதாவிகளாகவும், பணம் படைத்தவர்களாகவும், நகரவாசிகளாகவும்,இருக்கலாம். மனிதர்களாக இருக்கிறீர்களா? சக மனிதனது மரணத்திற்குக் கூட மரியாதை செலுத்தாத, இரங்காத நீங்கள் பண்பாடற்ற காட்டுவாசிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்கு கஷ்டம் வந்த போது உதவியவர், அறிவுறுத்தியவர், நேற்று வரை கூடிக் குலவியவருக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? ஒருவருடன் மணிக்கணக்கில் அரட்டையில் நேரத்தைக் கழித்த நீங்கள் அவரது இறுதிச் சடங்குக்கு மயானம் வரை செல்ல நேரக்கணக்கும் சிரமமும் பார்க்கிறீர்களே, நாளை உங்களுக்கும் மரணம் வரும், நினைவில் கொள்ளுங்கள்.

செப்டம்பர் 9, 2008

பதிவுத் திருடர்கள்

சில மாதங்கள் முன் நான் எழுதிய “மலைநாட்டு மச்சான்கள்” என்ற பதிவு வெயிலான் என்பவரது தளத்தில் காட்டப்பட்டிருந்தது. வெயிலான், இது வேறு எவரோ (தென்பாண்டியன்) எழுதியதாக உறுதியின்றி குறிப்பிட்டுள்ளார்.

http://www.kadugu.com/Katturai/Malaiyali.htm

அந்த பதிவு நெத்தியடியாக இருப்பதாகவும், ஒற்றுமை விரும்பிகளுக்கு வருத்தமூட்டுவதாகவும் பல மின்னஞ்சல்கள் வந்தன. சில நாட்களிலேயே அதை நீக்கி விட்டு கடுகு முதன்மைத் தளத்தில் முதல் பக்கத்தில் பார்வைக்கு அப்பதிவை இணைத்து விட்டேன். அது ஸ்கிரீன்ஷாட்டாக எடுக்கப்பட்டு, தளத்தின் பெயர் மறைக்கப்பட்டு எனக்கே சில முறை ஃபார்வர்ட் மின்ன்னஞ்சலாக வந்தது.

இது குறித்து மேலும் ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எனக்கு நேரமில்லாததால் தான் இரண்டு மாதங்களாக பதிவிட இயலவில்லை. இவ்வளவு நேரமின்மையிலும் எழுதும் எழுத்துக்கள் திருடப்படும்போது எவ்வளவு வருத்தமும் வயிற்றெரிச்சலும் ஏற்படும் என்று பதிவுத் திருடர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்

இது போல பலமுறை எனது நையாண்டி விலாஸ் பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன.

ப‌திவுத் திருட‌ர்க‌ளே……….

ப‌திவு ந‌ன்றாக‌ இருந்தால் அதை நீங்க‌ள் சொந்த‌மாக்கிக் கொள்ள‌ முடியாது, உங்க‌ள‌து என்று காட்டிக் கொண்டாலும் குட்டு ஒரு நாள் வெளிப்ப‌டும். ப‌திவுக்கான‌ சுட்டியையோ அல்ல‌து ஸ்கிரீன் ஷாட்டையோ வேறெவ‌ருக்கும் அனுப்பினால் கூட‌ எழுதிய‌வ‌ரின் பெய‌ர் மற்றும்/அல்லது த‌ள‌ முக‌வ‌ரியை நாக‌ரீக‌த்தின் பொருட்டு குறிப்பிடுங்க‌ள்.

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.